மடுமாதா திருத்தலத்தில் இடம் பெறவுள்ள ஆவணித் திருவிழாவின் முன்னாயத்த நடவடிக்கைகள் குறித்த விசேட கலந்துரையாடல் இன்று (24.07) வியாழக்கிழமை காலை 10 மணியளவில் மன்னார் மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
மருதமடு அன்னையின் ஆவணி மாதத் திருவிழா எதிர்வரும் ஆவணி மாதம் 6 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி 15 ஆம் திகதி விசேட திருவிழாவாக நடைபெற உள்ளது.
வருடா வருடம் மடு அன்னையின் ஆவணித் திருவிழாவில் கலந்து கொள்ள நாட்டின் பல பாகங்களில் இருந்தும் புலம்பெயர் நாடுகளில் இருந்தும் பல லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்ற நிலையில் இம்முறையும் இத்திருவிழாவில் கலந்துகொண்டு மடு அன்னையின் ஆசி பெற நாட்டின் பல பாகங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அந்த வகையில், திருத்தலத்தின் ஆவணி மாதத் திருவிழாவுக்கான முன்னாயத்த கலந்துரையாடல் மன்னார் மாவட்டச் செயலாளர் க.கனகேஸ்வரன் தலைமையில் மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை கிறிஸ்து நேசன் அடிகளார் மற்றும் மடு திருத்தலத்தின் பரிபாலகர் அருட்தந்தை பெப்பி சோசை அடிகளார் ஆகியோரின் பங்குபற்றுதலுடன் நடைபெற்றது. குறித்த கூட்டத்தில், வருகை தரும் பக்தர்களின் நலனை கருத்தில் கொண்டு முன்னெடுக்கப்பட வேண்டிய சகல விதமான ஏற்பாடுகள் குறித்தும் அழைக்கப்பட்ட திணைக் களங்களுடன் கலந்துரையாடப்பட்டது.
குறிப்பாக சுகாதாரம், போக்குவரத்து,மருத்துவ வசதிகள் ,நீர் விநியோகம் ,உணவு விநியோகம் உள்ளிட்டவை குறித்து ஆராயப்பட்டதுடன், சட்டம் ஒழுங்கை பின்பற்றும் வகையில் முப்படையினரின் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
மன்னார் மாவட்ட செயலாளர் தலைமையில் இடம்பெற்ற குறித்த முன்னாயத்த கலந்துரையாடலில், உள்ளூராட்சி மன்ற தவிசாளர்கள், ராணுவத்தினர், காவல்துறையினர், கடற்படை அதிகாரிகள்,பிரதேச செயலாளர்கள், வைத்தியர்கள், மற்றும் அழைக்கப்பட்ட திணைக்கள தலைவர்கள் கலந்து கொண்டனர்









