வடக்கு கிழக்கு மக்களின் பூர்வீக காணிகளை மீளவும் ஒப்படைக்க கோரி மன்னாரில் போராட்டம்

36
0
Spread the love

பூர்வீக காணிகளை உரிய மக்களிடம் உடனடியாக ஒப்படைக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து, மன்னார் நகர சுற்றுவட்டத்திற்கு முன்பாக இன்று (07) காலை 9.30 மணியளவில் ஜனநாயக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு, முல்லைத்தீவு கேப்பாப்புலவு மற்றும் மட்டக்களப்பு மயிலத்தமடு–மாதவனை பகுதிகளில் பல ஆண்டுகளாக தமது பூர்வீக காணிகளை மீட்டெடுக்கப் போராடி வரும் மக்களின் கோரிக்கைகளுக்கு ஒற்றுமையையும் ஆதரவையும் வெளிப்படுத்தும் நோக்கில் இந்தப் போராட்டம் நடத்தப்பட்டது.
போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள், “எமது காணி – எமது உரிமை”, “காணி உரிமை ஒரு மனித உரிமையாகும்”, “நிலம் எங்கள் உரிமை – நீதி எங்கள் இலக்கு”, “இலங்கை அரசே! பூர்வீக காணிகளை உடனடியாக உரிய மக்களிடம் ஒப்படையுங்கள்” உள்ளிட்ட பல்வேறு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி அமைதியான முறையில் தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
காணி உரிமை என்பது வெறும் சொத்து உரிமை மட்டுமல்ல; அது மனித உரிமை, வாழ்வுரிமை, சமூக நீதி மற்றும் மக்களின் கண்ணியத்துடன் தொடர்புடைய அடிப்படை உரிமை என போராட்டத்தில் பங்கேற்றவர்கள் வலியுறுத்தினர்.
மேலும், இராணுவ ஆக்கிரமிப்பில் உள்ள பொதுமக்களின் பூர்வீக காணிகள் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும், நீண்டகாலமாக இடம்பெயர்ந்துள்ள மக்கள் தமது சொந்த நிலங்களில் பாதுகாப்புடனும் கண்ணியத்துடனும் மீளக் குடியமர்த்தப்பட வேண்டும், காணி உரிமைகள் தொடர்பான தீர்வுகள் மனித உரிமைகள், சட்டத்தின் ஆட்சி மற்றும் ஜனநாயகக் கொள்கைகளின் அடிப்படையில் அமைய வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
காணி இழந்த மக்களின் குரல் அமைப்பின் ஏற்பாட்டிலும், MSEDO (Mannar Social and Economic Development Organization) அமைப்பின் ஒருங்கிணைப்பு மற்றும் ஆதரவுடனும் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில், மனித உரிமை செயற்பாட்டாளர்கள், சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள், , சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here