மஹவ – அநுராதபுரம் ரயில் மார்க்கத்திற்கு சமிக்ஞை மற்றும் தொலைத்தொடர்பு அமைப்பை நிறுவுவதற்காக இந்திய அரசாங்கத்தால் முதல் தவணையாக 2.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் விடுவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டம் 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் இலங்கை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவும் கலந்துரையாடி ஆரம்பிக்கப்பட்டது.
இந்தத் திட்டத்திற்கு இந்திய அரசாங்கம் 14.89 மில்லியன் அமெரிக்க டொலர் கடனாக வழங்க முன்மொழிந்திருந்தாலும், 2024 ஆம் ஆண்டு டிசம்பரில் ஜனாதிபதியின் இந்தியாவிற்கு அரச முறைப் பயணத்தின்போது இந்த தொகை மானியமாக மாற்றப்பட்டது.
இந்தத் திட்டம் இந்திய அரச நிறுவனமான ஐ.ஆர்.சி.ஓ.என் இன்டர்நேஷனல் லிமிடெட் மூலம் செயல்படுத்தப்படுகிறது.
இந்திய உதவியுடன், வடக்கு மாகாண ரயில் மார்க்கத்தில் உள்ள தண்டவாளங்கள் மணிக்கு 100 கி.மீ வேகத்தில் ரயில் இயக்கத்தை ஆதரிக்கும் வகையில் மேம்படுத்தப்பட்டுள்ளன.
மேலும், மேம்பட்ட சமிக்ஞை அமைப்பு மூலம் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதுடன், ரயில் சேவைகளின் செயல்திறனை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தத் திட்டத்திற்கான அடிப்படைப் பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், 2026 ஆம் ஆண்டு ஒகஸ்ட் மாதத்திற்குள் இதனை நிறைவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
இலங்கை ரயில்வே திணைக்களத்திற்கு இந்தியாவின் ஒட்டுமொத்த நிதி உதவி சுமார் 1.2 பில்லியன் அமெரிக்க டொலர்களாகும்.
இதுவரை, இந்தியா சுமார் 500 கி.மீ ரயில் மார்க்கத்தை மறுசீரமைத்து மேம்படுத்தியுள்ளதுடன், சுமார் 330 கி.மீ ரயில் வலையமைப்பில் சமிக்ஞை மற்றும் தொலைத்தொடர்பு அமைப்புகளை நிறுவியுள்ளது.
இதன் மூலம் வடக்கு-தெற்கு இணைப்பு மேம்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு மேலதிகமாக, இந்தியா பரந்த அளவிலான இயந்திரங்கள், டீசல் மல்டிபிள் யூனிட்கள் , மற்றும் பயணிகள் பெட்டிகளை வழங்கியுள்ளது. இது இலங்கை ரயில்வேயின் செயல்பாட்டுத் திறனை மேலும் வலுப்படுத்துகிறது.







