மன்னார் தீவில் காற்றாலைகள் அமைக்க வேண்டாம் என மக்கள் தொடர்ந்தும் போராட்டங்களை முன்னெடுத்து வந்த நிலையில் அந்தத் திட்டமானது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
தற்போது மீண்டும் நான்கு காற்றாலைக் கோபுரங்களை அமைப்பதற்கான பொருட்கள் 80 வாகனங்களில் திருகோண மலையிலிருந்து மன்னார் தீவிற்கு கொண்டுவரப்பட்ட நிலையில் குறித்த வாகனங்களை மன்னார் தீவிற்குள் அனுமதிக்க மாட்டோம் என மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
நேற்றைய தினம் (04.08) மாலை 6 மணி அளவில் மன்னார் தள்ளாடி அந்தோணியார் கோயிலுக்கு முன்பாக திரண்ட மக்கள் மன்னார் தீவினை நோக்கி வந்துகொண்டிருக்கும் குறித்த வாகனங்களை வழி மறித்து திருப்பி அனுப்புவதற்கு எதிர்பார்த்து இருந்த வேளையில் குறித்த வாகனங்கள் மன்னார் முருங்கன் வரையில் வந்து அங்கே நிறுத்தி வைக்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டன.
இந்நிலையில் இன்றைய தினம் (04.08) குறித்த வாகனங்கள் மன்னார் தீவிற்குள் காற்றாலை அமைக்கும் பொருட்களுடன் வர இருப்பதினால் அதனை தடுத்து நிறுத்தும் நோக்கோடு மன்னார் சுற்றுவட்டத்திற்கு முன்பாக நின்று மக்கள் அமைதியான ஒரு போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.
மக்களுக்கு ஆதரவாக அங்கே திரண்டிருந்த மன்னார் பிரஜைகள் குழுவினர், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள், சமூக மட்ட அமைப்பினர்.மற்றும் அருட்பணியாளர்கள் ஒன்றிணைந்து இந்த காற்றாலைத் திட்டத்தை நிறுத்துவதற்கான தொடர்ச்சியான ஒரு போராட்டத்தை நாளைய தினமும் முன்னெடுப்பதற்காக பொது மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
அத்துடன் இன்று மாலை மன்னார் தள்ளாடி சந்தியில் ஒன்று கூடுமாறும் மக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. குறித்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரனும் போராட்டத்தில் கலந்து கொண்டிருந்தார்.
மேலும் மன்னார் மாவட்ட பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்பணி மார்க்கஸ் அடிகளார், பொது அமைப்புகளின் ஒன்றியத் தலைவர் வீ. எஸ் சிவகரன், மன்னார் மாவட்ட குரு முதல்வர் கிறிஸ்துநேசன் அடிகளார் மற்றும் சட்டத்தரணி பா. டெனீஸ்வரன் ஆகியோர் மாவட்ட செயலாளரைச் சந்தித்து இது தொடர்பில் கலந்துரையாடியுள்ளனர்.
இந்நிலையில் எதிர்வரும் புதன்கிழமை மன்னார் மாவட்ட நீதிமன்றத்தில் குறித்த காற்றாலை திட்டத்திற்கு எதிராக அடிப்படை உரிமை மீறல் வழக்கு ஒன்றினைத் தாக்கல் செய்ய உள்ளதுடன் அதுவரையில் காற்றாலை கோபுரங்கள் அமைக்கும் பொருட்களை மன்னார் தீவுக்குள் கொண்டு வரவிடாமல் மக்கள் போராட்டம் தொடரும் எனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது










