மன்னார் காற்றாலை திட்டம் குறித்த விசேட சபை அமர்வு (Video)

63
0
Spread the love

 

மன்னார் நகர சபையின் விசேட அமர்வு இன்று (07.08) வியாழக்கிழமை காலை 10 மணியளவில் இடம்பெற்றது. நகர சபை தவிசாளர் டேனியல் வசந்தன் தலைமையில், இடம்பெற்ற இந்த விசேடகூட்டத்தில் காற்றாலை நடவடிக்கைகள் குறித்த விசேட கலந்துரையாடல் ஒன்று மேற்கொள்ளப்பட்டது.

குறித்த கலந்துரையாடலின் பின்னர், இனிவரும் காலங்களிலே மன்னார் தீவிற்குள் காற்றாலை அமைத்தல் முற்றாகத் தடை செய்யப்பட வேண்டும் அதற்கு அனுமதி அளிக்கக்கூடாது எனவும் மேலும் நகர சபைக்குட்பட்ட பிரதேசங்களில் நகர சபையின் அனுமதியின்றி எந்த ஒரு அமைப்புகளோ அல்லது காற்றாலை நிறுவனங்களோ, வீதிகளைப் புனரமைக்கவோ கட்டிடங்களை அமைக்கவோ இயலாது எனவும் அவ்வாறு அமைப்பதற்கு எதிரான ஒரு சட்ட நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் எனவும் ஏக மனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

குறித்த கலந்துரையாடலில் நகர சபையின் 12 உறுப்பினர்கள் பங்கேற்று இருந்தனர்.

மேலும்,இந்த விசேட கலந்துரையாடலின் பின் நகர சபை தவிசாளர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், "காற்றாலை மின்சாரத் திட்டம் இனிவரும் காலங்களில் இந்த மன்னார் தீவினில் இடம்பெற அனுமதி அளிக்க கூடாது என்ற நோக்கத்தில் குறித்த விசேட கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதற்கமைவாக நாங்கள் சில தீர்மானங்களை மேற்கொண்டுள்ளோம். மேலும்,சில நிறுவனங்கள் தங்கள் வேலைகளுக்கு மக்களின் அனுமதியைப் பெறுவதற்காக கபடத்தனமாக வீதிகளை அமைத்துக் கொடுத்தல், நிவாரணங்களை வழங்குதல்,மைதானங்களை சீர் செய்து கொடுத்தல் போன்ற வேலைகளில் ஈடுபட்டு வருகின்றன. இதிலே மக்கள் அவதானமாக விழிப்புணர்வுடன் செயற்பட வேண்டும். அவர்கள் ஐந்து ரூபாய் கொடுத்துவிட்டு 5 லட்சத்தை எடுத்துச் செல்வதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார்கள் என்பதை மக்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

எனவே நான் ஊடகங்கள் வாயிலாக மக்களை கேட்டுக் கொள்வது உங்களுடைய வாழ்வாதாரத்தை பாதிக்கின்ற விடயங்களில் நீங்கள் அவதானமாக இருக்க வேண்டும் எனத் தெரிவித்தார்,"