முல்லைத்தீவு மாவட்டம் ஒட்டு சுட்டான் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட
முத்தையன்கட்டுப் பகுதியில் இளைஞர்கள் மீது இராணுவத்தினர் மேற்கொண்ட தாக்குதலில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் ஒருவர் படுகாயமடைந்து முல்லைத்தீவு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
முத்தையன்கட்டு பகுதியில் இளைஞர்கள் மீது இராணுவத்தினர் தாக்குதல் மேற்கொண்டதில் ஒருவர் படுகாயம் அடைந்த நிலையில் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன் மற்றய ஒருவர் காணாமல் போயிருந்தார்.
இந்நிலையில் காணாமல் போனவர் இன்று முத்தையன்கட்டு குளத்தில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த இளைஞனை இராணுவத்தினர் கொலை செய்து குளத்தில் போட்டதாக உறவுகள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
இந்நிலையில் குறித்த இளைஞர்களை இராணுவ முகாமுக்கு அழைத்து அவர்கள் மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் மூன்று இராணுவத்தனர் ஒட்டுசுட்டான் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஒட்டுசுட்டான் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முத்தையன்கட்டு பகுதியில் இலங்கை இராணுவத்தின் 13 SLNG இராணுவ முகாமை விட்டு இராணுவத்தினர் தற்போது வெளியேறி வருகின்ற
நிலையில் ,
குறித்த இராணுவ முகாமில் பயன்படுத்தப்பட்டு வந்த சில பொருட்களை இராணுவத்தினர் முகாமைசுற்றியுள்ள ஜீவநகர் கிராம இளைஞர்களுக்கு வழங்கி அதை அவர்கள் விற்றுவிட்டு இராணுவத்தினருக்கு போதைப்பொருட்களை வாங்கி வந்து வழங்குகின்ற செயற்பாடு அண்மைய சில நாட்களாக தொடர்ச்சியாக இடம்பெற்று வந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த கிராமத்தில் வாழ்கின்ற இளைஞர்கள் தொழில் வாய்ப்புகளற்ற நிலையில் இவ்வாறாக இராணுவத்தினரால் விற்கப்படுகின்ற பொருட்களை பெற்று வெளியில் கொண்டு சென்று விற்றுவிட்டு அவர்களுக்கு தேவையான போதை பொருட்களையும் வழங்கி வந்திருக்கின்றார்கள்
இந்நிலையில் கடந்த (07.08) அன்று மாலை 7 மணியளவில் உயிரிழந்த இளைஞரின் தொலைபேசிக்கு அழைப்பெடுத்த இராணுவத்தினர் அன்றிரவு தமது முகாமுக்கு வருமாறும் சில பொருட்களை வழங்குவதாகவும் தொலைபேசி மூலம் தெரிவித்து இருக்கின்றார்கள்
இதன் அடிப்படையில் உயிரிழந்த இளைஞன் உட்பட ஐந்து இளைஞர்கள் அங்கு சென்றபோது இளைஞர்களிடம் இரும்பு கட்டில்கள் தகரங்கள் உட்பட சில பொருட்களை இளைஞர்களிடம் வழங்கியுள்ளனர்
இவ்வாறு பொருட்களை பெற்றுக் கொண்டிருந்த போது முகாமில் இருந்த பல இராணுவத்தினர் சேர்ந்து பொருட்களை பெறச் சென்ற இளைஞர்களுக்கு தடிகள், கம்பிகளால் தாக்கியுள்ளனர்.
இதன்போது குளத்தில் குதித்து மூவர் தப்பி வந்துள்ளனர் மற்றைய இருவரில் ஒருவர் இராணுவத்தினரின் தாக்குதலுக்கு உள்ளாகிய நிலையில் அங்கு சென்ற பொது மக்கள் இராணுவத்துடன் முரண்பட்டு குறித்த இளைஞனை காயங்களுடன் மீட்டு முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
மற்றைய ஒருவர் காணாமல் போயிருந்த நிலையில் உறவுகள் அவரை இராணுவத்தினர் கொலை செய்து விட்டதாகத் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், மற்றைய இளைஞர் இராணுவத்தினரால் கொலை செய்யப்பட்டு குளத்தில் போடப்பட்டிருக்கலாம் என சிலர் சந்தேகம் வெளியிட்ட நிலையில் நேற்றைய தினம் முழுவதும் மக்கள் குளத்தில் தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டிருந்தனர்.
எனினும் குளத்தில் எந்த தடயமும் காணப்படவில்லை
இந்நிலையில் இன்று (09.08) காலை முத்தையன்கட்டு குளத்தில் குறித்த காணாமல் போன குடும்பஸ்தரின் சடலம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு வருகை தந்த முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் அவர்கள் சடலத்தைப் பார்வையிட்டு மருத்துவ பரிசோதனைகளுக்காக சடலத்தை ஒப்படைக்குமாறு உத்தரவிட்டார்.
இதேவேளை கிளிநொச்சி தடயவியல் பொலிசாரும் குறித்த சம்பவம் தொடர்பான கள ஆய்வில் ஈடுபட்டிருந்தனர்.
இராணுவத்தினரால் இளைஞர்கள் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதாகவும் காயப்படுத்தப்பட்டதாகவும் பொதுமக்கள் கொந்தளித்திருந்த நிலையில்,
இது தொடர்பான விசாரணைகளுக்காக கிளிநொச்சியில் இருந்து விசேடமாக நியமிக்கப்பட்ட பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தலைமையில் மாங்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, ஒட்டுசுட்டான் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலைய பொறுப்திகாரி உள்ளிட்டவர்கள் தலைமையிலான விசேட குழு ஒன்று குறித்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
மேலும் இராணுவ முகாமுக்குள் பொலிசார் சென்று கலந்துரையாடல் மேற்கொண்டு மீண்டும் வெளியில் வரும்போது குறித்த இடத்தில் ஒன்று கூடிய மக்கள் பொலிசாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் அங்கு வந்த பொலிசார் ஒரு இராணுவ சிப்பாயை கைது செய்திருப்பதாகவும் மேலும் சிலரை கைது செய்யப் போவதாகவும் தங்களது கடமைகளை செய்ய விடுமாறு கோரி, மக்களை அவ்விடத்தில் இருந்து அகற்றி இருந்தனர்.
அதனைத் தொடர்ந்து பொலிசாரால் மேலும் நான்கு இராணுவத்தினரை விசாரணைகளுக்காக ஒட்டுசுட்டான் பொலிஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில். இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்
கைது செய்யப்பட்டவர்களில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நபர் மீது தாக்குதல் நடத்திய இராணுவ சிப்பாய், மற்றும் பொதுமக்கள் தங்களுக்கு அழைப்பெடுத்ததாக தெரிவிக்கப்பட்ட தொலைபேசி இலக்கங்கள் அடிப்படையில் அந்த சம்பவங்களுடன் தொடர்புடையவர்களாக கருதப்பட்டு மூவரும் கைது செய்யப்பட்டுள்ளர்.
குறித்த சம்பவத்தில் உயிரிழந்தவர் முத்தையன்கட்டில் வசிக்கும் 32 வயதுடைய எதிர்மன்னசிங்கம் கபில்ராஜ் என்ற ஏழு மாத குழந்தையின் தந்தை எனத் தெரிய வருகின்றது.







