காலத்தின் தேவையறிந்து பண்பாட்டு விழாக்களை தொடர்ந்து நடத்தவேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.
வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் அலகின் அனுசரணையில் மன்னார் மாவட்டச் செயலகமும், மன்னார் மாவட்டக் கலை பண்பாட்டுப் பேரவையும் இணைந்து நடத்திய மன்னார் மாவட்ட கலை பண்பாட்டு பெருவிழா இன்று (28.08) வியாழக்கிழமை காலை மன்னார் நகர மண்டபத்தில் மன்னார் மாவட்டச் செயலாளர் க.கனகேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்ட ஆளுநர் தனது உரையில்,
“தமிழர்களுக்கென்று தனித்துவமான பண்பாடு கலாசாரம் உண்டு. ஆனால் இன்று அவை மறக்கப்பட்டு அல்லது மாற்றப்பட்டுக்கொண்டு வருகின்றன. அவற்றை நாம் மறக்கக் கூடாது. நல்ல மாற்றங்களை உள்வாங்கி அவற்றை மேம்படுத்த வேண்டும்.
பலனை எதிர்பாராமல் இந்தச் சமூகத்துக்காக எமது பண்பாடு கலாசாரத்தை பேணிப் பாதுகாப்பதற்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்ட மூத்த கலைஞர்களை கௌரவிப்பது சிறப்பானது. மூத்த கலைஞர்களை கௌரவிப்பதுடன் அவர்களின் அனுபவங்களை எமது அடுத்த தலைமுறைக்கும் பெற்றுக்கொடுக்க வேண்டும்” என்றார்.
இந்த நிகழ்வில் மன்னெழில் நாலும் வெளியிட்டு வைக்கபட்டது.
மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில்,
பிரதம விருந்தினராக வடமாகாண ஆளுநர் நா.வேதநாயகன்,சிறப்பு விருந்தினர்களாக வட மாகாண பண்பாட்டலுவல்கள் அலகு பிரதிப் பணிப்பாளர் திருமதி லாகினி நிருபராஜ்,மன்னார் மாவட்ட மூத்த சட்டத்தரணி எம்.எம்.சபூர்தீன் உள்ளடங்களாக அழைக்கப்பட்ட அதிகாரிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இதன் போது இசை நடன,கலாச்சார பண்பாடுகளை பிரதி பலிக்கும் நிகழ்வுகள் பிரதான பாலத்தில் இருந்து மன்னார் நகர சபை மண்டபம் வரை ஊர்வலமாக நிகழ்த்தப்பட்டது.
மன்னார் நகரசபை மண்டபத்தில் விருந்தினர்களுக்கு கும்ப ஆர்த்தி எடுக்கப் பட்டதோடு,தமிழ் தாய்க்கு மாலை அணிவிக்கப்பட்டது.
மன்னெழில் 03 நூல் விருந்தினர் களினால் வைபவ ரீதியாக வெளியீடு செய்து வைக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து பல்வேறு நிகழ்வுகள் அரங்கேற்ற பட்டதோடு, மன்னார்,நானாட்டான்,முசலி,மாந்தை மேற்கு மற்றும் மடு ஆகிய 5 பிரதேசச் செயலாளர்கள் பிரிவுகளில் இருந்து தெரிவு செய்யப்பட்ட கலைஞர்கள் கௌரவிக்கப்பட்டனர்.
குறித்த நிகழ்வில் திணைக்கள அதிகாரிகள்,பணியாளர்கள்,கலைஞர்கள் உட்பட பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.















