அகில இலங்கை பாடசாலை மாணவர்களுக்கு இடையிலான தேசிய மட்ட 17 வயது பிரிவுக்குட்பட்ட பெண்களுக்கான பளுதூக்குதல் போட்டியில் வடமாகாணம் சார்பாக மன்னார் சித்திவிநாயகர் இந்து கல்லூரியின் மாணவி செல்வி சம்சிக்கா சத்தியசீலன் கலந்து கொண்டு தங்கப்பதக்கம் பெற்றுக்கொண்டுள்ளார்.
குறித்த மாணவியைக் கௌரவிக்கும் நிகழ்வு ஒன்று இன்றைய தினம் (16.09) செவ்வாய் காலை 10.00 மணியளவில் மன்னார் தேசிய இளைஞர் படையணிப் பயிற்சி நிலையத்தில் நடைபெற்றது. மன்னார் தாழ்வுபாடு கிராமத்தைச் சேர்ந்த 15 வயது மாணவியான சம்சிகா பழு தூக்கும் போட்டியில் வட மாகாணம் சார்பாகக் கலந்து கொண்டு வெற்றியீட்டிய முதல் வீராங்கனை ஆவார். இந்நிலையில்,மன்னார் தேசிய இளைஞர் படையணி பயிற்சி நிலையத்தின் பொறுப்பு அதிகாரி கப்டன் சர்ராஜ் தலைமையில் குறித்த மாணவி, நினைவுச் சின்னம் வழங்கிப் பொன்னாடை போர்த்து கௌரவிக்கப்பட்டார்.
இதன் போது கருத்து தெரிவித்த மன்னார் தேசிய இளைஞர் படையணி பயிற்சி முகாமின் பொறுப்பதிகாரி கப்டன் எஸ் சர்ராஜ், "அண்மையில் அரசாங்க அதிபரின் உதவியுடன் உடல் வலுவூட்டல் நிலையம் ஒன்றை எமது நிறுவனத்தில் ஆரம்பித்திருக்கிறோம். அந்த வகையில் மாணவர்களை இவ்வாறான போட்டிகளுக்கு நாங்கள் தயார்படுத்திக் கொண்டு வருகிறோம். இந்நிலையில் குறித்த மாணவி பாடசாலையில் உபகரணங்கள் போதாமையினால் எம்மை நாடி வந்தார்.
அவருக்கு நாங்களும் பயிற்சிகள் வழங்கியிருந்தோம். ஆகவே அவருடைய வெற்றியில் நாங்களும் மகிழ்ச்சியடைகிறோம். எமது நிறுவனமானது கல்வி மற்றும் இணைப்பாடவிதான செயற்பாடுகளில் தடம்பதித்துள்ளதோடு, இந்த மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர்களுக்கும் பாரிய சேவை ஆற்றி வருகிறது.
அந்த வகையில்இளைஞர்களை வலுவூட்டி,அவர்களுடைய வாழ்வை மேம்படுத்துவதில் உறுதுணையாக இருப்போம் எனத் தெரிவித்தார்.
குறித்த கௌரவிப்பு நிகழ்வில் மன்னார் தேசிய இளைஞர் படையணியின் பொறுப்பதிகாரி கப்டன் S. சர்ராஜ் , உடல் வலுவூட்டல் பயிற்சிவிப்பாளர்,அர்ஷாத், உடற்பயிற்சி மற்றும் ஒழுக்காற்று போதனாசரியர்களான D. ஆன் டியூலா, மற்றும் J. விஜயராஜ் , அழகியல் போதனாசரியரான W. ஆன் கிறிஷோலினி, ஆங்கில போதனாசரியரான M. ஹம்சனா மற்றும் முகாமைத்துவ உதவியாளர் J. ஜானிஸ் ஆகியோரும் மாணவியின் தந்தையும் கலந்து கொண்டிருந்தனர்.










