மன்னார் நகர சபையினால் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வரும் சிரமதானப் பணிகள்

276
0
Spread the love

வளமான நாடும் அழகான வாழ்க்கையும் 'மறுமலர்ச்சி நகரம் என்னும் தொனிப்பொருளில் மன்னார் நகர சபையின் தவிசாளர் டானியல் வசந்தன் தலைமையில் மன்னார் நகரத்தில் சுத்திகரிப்புப் பணிகள் நேற்றைய தினம் (16.09) செவ்வாய்க்கிழமை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

நகர சபை.உறுப்பினர்கள், உத்தியோகத்தர்கள்,இராணுவத்தினர், கடற்படையினர், நகர சபையின், சுத்திகரிப்பு பணியாளர்கள், மற்றும் பொதுமக்கள் இணைந்து அடையாளம் காணப்பட்ட பகுதிகளில் சிரமதானப் பணிகளை முன்னெடுத்துள்ளனர்.

நகர சபைத் தவிசாளர் இந்த சிரமதானப் பணி குறித்துத் தெரிவிக்கையில், "பல வேலைத் திட்டங்களை மன்னார் நகர சபையானது முன்னெடுத்து வருகின்றது. மன்னார் மாவட்டச் செயலகம், வீதி அபிவிருத்தி அதிகார சபை, மன்னார் பிரதேச செயலகம் ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் இந்தச் சிரமதான பணியினை நாங்கள் முன்னெடுத்து வருகின்றோம்.

சாந்திபுரம் பகுதியிலே சுத்திகரிப்பு பணியினை மேற்கொண்டு இருக்கிறோம் அத்துடன் மன்னார் தலைமன்னார் வீதியில், எழுத்தூர் சந்தியிலிருந்து ஐ ஓ சி எரிபொருள் நிரப்பு நிலையம் வரையிலான வடிகால்களை அகலப்படுத்தி, அதனைச் சுத்தப்படுத்தி,வெள்ள நேரத்திலே மக்களுக்கு ஏற்படுகின்ற அனர்த்தத்தை முடிந்தளவு தடுப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம்.

அத்தோடு பெரிய கமப்பகுதியிலே அமைந்துள்ள அனைத்துக் கால்வாய்களையும் தூர்வாரி அவற்றைப் பெரிய கால்வாயுடன் கொண்டு சென்று இணைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கோரைக் குளத்திலிருந்து வடகடலுக்கு தண்ணீரைக் கொண்டு சேர்க்கும் முகமாக நான்கு மில்லியன் ரூபாய் செலவில் வடிகால் அமைக்கின்ற வேலையை இன்று முன்னெடுத்துள்ளோம். கடற்படையினர் ராணுவத்தினர் எம்முடன் இணைந்து இந்த சுத்திகரிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். நகர சபையின் உறுப்பினர்கள், உத்தியோகத்தர்கள், மற்றும் சுத்திகரிப்பு பணியாளர்கள் இணைந்து வெயிலையும் பாராது வேலை செய்து வருகின்றனர் அவர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்வதோடு எமது நகரத்தைச் சுத்தமாக வைத்திருப்பதற்கு பொதுமக்களாகிய உங்களிடம் நான் ஒத்துழைப்புக் கோரி நிற்கின்றேன்.

குப்பைகளை வீதிகளில் வீசாமல் நகர சபையிடம் ஒப்படையுங்கள் எனத் தயவாகக் கேட்டுக்கொள்கிறேன் என்றார்."