மன்னார் மாவட்ட வைத்தியசாலைக்கு ஆளுநர் உள்ளிட்ட குழு விஜயம்

244
0
Spread the love

வடக்கு மாகாண ஆளுநர் வேதநாயகன் உள்ளிட்ட குழுவினர் இன்றைய தினம் புதன்கிழமை (08.10)மன்னார் மாவட்ட வைத்தியசாலைக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டனர்.

இந்திய அரசாங்கத்தால் மன்னார் மாவட்ட வைத்தியசாலைக்கு ஒதுக்கப்பட்ட 600 மில்லியன் ரூபா நிதியைப் பயன்படுத்தி முன்னெடுக்கப்பட வேண்டிய வேலை திட்டங்கள் தொடர்பாக கலந்துரையாடலை மேற்கொள்வதற்காகவே குறித்த குழுவினர் இன்றைய தினம் வருகை தந்துள்ளனர்.

அந்த வகையில் இன்று காலை 9 மணியளவில் புனரமைக்கப்பட்ட ஆய்வுக்கூடத்தைத் திறந்து வைத்த ஆளுநர் அங்கே மரம் நடுகையையும் மேற்கொண்டதுடன் புனரமைக்கப்பட்ட வாய் மற்றும் முக எலும்பு சத்திர சிகிச்சைக் கூடத் தினையும் திறந்து வைத்தார்.

அவசர சிகிச்சை பிரிவு மற்றும் இரத்த சுத்திகரிப்பு பிரிவினையும் பார்வையிட்ட ஆளுநர் உள்ளிட்ட குழுவினர் அதன் பின்னர், காலை 9:30 மணியளவில் மன்னார் வைத்தியசாலையின் கேட்போர் கூடத்தில் இடம் பெற்ற கலந்துரையாடலில் கலந்து கொண்டனர். இக் கலந்துரையாடலின் போது, இந்திய அரசாங்கத்தினால் மன்னார் வைத்தியசாலைக்கு ஒதுக்கப்பட்ட 600 மில்லியன் ரூபா நிதியில் புதிய கட்டடங்கள் அமைத்தல், வைத்தியசாலையின் ஆளணிப் பற்றாக்குறை, தேவைப்பாடுகள் போன்ற பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டது, இதன் போது மன்னார் வைத்தியசாலை கீதம் ஆளுநரினால் வெளியிடப்பட்டு வைக்கப்பட்டது. மேலும், மாவட்டப் பொதுவைத்தியசாலையின் பணிப்பாளரும், பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரும் ஆகிய வைத்திய கலாநிதி MHM ஆசாத் அவர்களின் முயற்சியில், எந்த ஒரு வைத்திய சாலையிலும் காணப்படாத வகையில் நோயாளர்களுக்கென பிரத்தியேகமாக உருவாக்கப்பட்ட ஆவணக் கோப்புகள் வெளியீடு செய்து வைக்கப்பட்டது.

குறித்த நிகழ்வில்,வடமாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன், வட மாகாண செயலாளர் தனுஜா முருகேசன். வடமாகாண சுகாதார அமைச்சின் பணிப்பாளர் Dr.சமன் பத்திரன சுகாதார அமைச்சின் செயலாளர், P.ஜெயராணி மன்னார் மாவட்டச் செயலாளர் க.கனகேஸ்வரன்,வட மாகாண கட்டடத் திணைக்களப் பணிப்பாளர், மன்னார் நகர முதல்வர், மாவட்ட பொது வைத்தியசாலை பணிப்பாளர், வைத்திய நிபுணர்கள் தாதியர்கள், வைத்தியசாலையின் அபிவிருத்தி குழு உறுப்பினர்கள் உட்பட வைத்தியசாலையின் பணியாளர்கள் என அனைவரும் கலந்து சிறப்பித்தனர்.