அணையா விளக்கு தூபி கடந்த 8 ஆம் திகதி விஷமிகளால் சேதமாக்கப்பட்டதைத் தொடர்ந்து நேற்றைய தினம் (09.10) அணையா விளக்கு தூபி உடனடியாக புனரமைக்கப்பட்டதாக ஜனநாயக போராளிகள் கட்சி தலைவர் வேந்தன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,
“தமிழ் தேசிய இருப்பை கருத்திற்கொண்டும் தமிழர் கடந்து வந்த வேதனைகள் அடக்கு முறை மற்றும் படுகொலைகள் என்பவற்றை சந்ததிகளுக்கு கடத்தும் நோக்குடன் தான் நினைவு தூபிகள் நிருபப்படுகிறது
அதன் தொடர்ச்சியாக செம்மணியில் மனித புதை குழி அடையாளம் காணப்பட்ட பகுதியில் அமைக்கப்பட்டிருந்த அணையா விளக்கு தூபி அடித்து சேதப்படுத்தப்பட்டுள்ளது.
செம்மணி மனிதப் புதைகுழி மீதான இருள் நீங்கவும், வலிந்து காணாமலாக்கப்பட்டோர் விடயத்திற்கு சர்வதேச நீதி கோரியும் யாழ்ப்பாணத்தின் செம்மணி பகுதியில் “அணையா விளக்கு” போராட்டம் மக்கள் செயல் எனப்படும் தன்னார்வ இளையோர்களினால் ஏற்பாடு செய்யப்பட்டது.
கடந்த ஜூன் மாதம் 23, 24 மற்றும் 25 ஆம் தினங்களில் அணையா விளக்கு ஏற்றும் சிறு தூபி அமைக்கப்பட்டு அதில் தீபம் ஏற்பட்டது அதனை தொடர்ந்து பல கவனயீர்ப்பு போராட்டங்கள் நடைபெற்றன.
ஆனாலும் நேற்று முன்தினம் தமிழர் மீது இருக்கிற தமது வன்மத்தை கட்டவிழ்த்து விடும் நோக்கில் இந்த நினைவுத்தூபி உடைக்கப்பட்டுள்ளதை ஒவ்வொரு தமிழ் மக்களின் மீதும் இருக்கும் கொடூர எண்ணத்தை வெளிப்படுத்துகிறது
இவ்வாறான செயற்பாடுகளை கட்டுப்படுத்த வேண்டும். படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவுத்தூபிகள் உடைக்கப்படுவதால் படுகொலை செய்யப்பட்டவர்களை மீண்டும் மீண்டும் படுகொலை செய்யப்படுகிறார்கள் போன்ற உணர்வுகள் ஒவ்வொருவரின் மனதிலும் எழுகின்றன
மற்றும் அவர்களின் நீதிக்கான குரல் மற்றும் ஆத்மாக்கள் இவ் நினைவுத்தூபிகளை சுற்றி வருவதாகவும் அவர்களுக்கான அஞ்சலிகள் மரியாதைகளை நீங்கள் கொடுக்கவில்லை என்றாலும் பரவாயில்லை இவ்வாறான கேவலமான செயற்பாடுகளில் ஈடு பட வேண்டாம்.
இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுவர்களை அரசாங்கம் உடனடியாக கைது செய்து அவர்களுக்கான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் ” என்றார்.







