குச்சவெளி பிரதேச சபை தலைவர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் அனியா பிள்ளை முபாரக் மற்றும் அவரது தனிப்பட்ட சாரதி எம்.எம்.இர்ஷாட் ஆகியோர் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளினால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
காணி உரிமத்தை வழங்குவதற்காக பெண்ணொருவரிடமிருந்து 5 இலட்சம் ரூபாவை இலஞ்சமாக பெற முயற்சித்த போதே அவர்கள் கைதாகியுள்ளனர்.
20 பேர்ச்சஸிற்கான காணி உரிமத்தை வழங்குவதற்காக குறித்த பெண்ணிடமிருந்து ஏற்கனவே பிரதேச சபை தவிசாளர் 160,000 ரூபாவை இலஞ்சமாக பெற்றுள்ளார்.
எனினும் மேலதிகமாக 5 இலட்சம் ரூபாவை தனக்கு வழங்க வேண்டுமென அவர் குறித்த பெண்ணிடம் தெரிவித்துள்ளார்.
கைதான அவர் திருகோணமலை – நிலாவெளி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
அவரை திருகோணமலை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.







