மண்சரிவில் சிக்குண்ட 5 இராணுவ வீரர்கள் உயிருடன் மீட்பு

164
0
Spread the love

நோர்டன்பிரிட்ஜ் பகுதியில் பெய்து வரும் இடைவிடாத கனமழையின் காரணமாக, விமலசுரேந்திர அணைக்கட்டுக்கு அருகே உள்ள இராணுவ சோதனைச் சாவடியின் மீது ஏற்பட்ட மண்சரிவில் சிக்கியிருந்த ஐந்து இராணுவ வீரர்கள் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.

இவர்களை லக்சபான இராணுவ முகாமின் மீட்புக் குழுவினர் மீட்டு, டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாக நோர்டன்பிரிட்ஜ் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று, நோர்டன்பிரிட்ஜ் – கினிகத்தேன பிரதான வீதியில் ஏற்பட்ட மண்சரிவின் காரணமாகச் சோதனைச் சாவடி முழுமையாக மண்ணுக்குள் புதைந்தது. அப்போது 19வது இலங்கை தேசிய பாதுகாப்பு படையணியைச் சேர்ந்த சார்ஜென்ட் மேஜர் ஒருவர் உள்ளடங்கலாக ஐந்து வீரர்கள் அந்தச் சோதனைச் சாவடியில் வழக்கம் போல் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டிருந்தனர்.

மண்சரிவு ஏற்பட்டதை முதலில் அவதானித்த நோர்டன்பிரிட்ஜ் பொலிஸார், உடனடியாக லக்சபான இராணுவ முகாமின் கட்டளை அதிகாரியைத் தொடர்புகொண்டனர்.

தகவல் கிடைத்ததையடுத்து, கட்டளை அதிகாரி உடனடியாக மீட்புக் குழுவுடன் சம்பவ இடத்திற்குச் சென்றார்.

பின்னர், நோர்டன்பிரிட்ஜ் பொலிஸ் அதிகாரிகளுடன் இணைந்து மண்ணுக்குள் சிக்கியிருந்த வீரர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.

மீட்கப்பட்ட ஐந்து பேரும் உடனடியாக டிக்கோயா ஆதார வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டு, அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மண்சரிவு காரணமாக நோர்டன்பிரிட்ஜ் – கினிகத்தேன பிரதான வீதியினூடான போக்குவரத்து முற்றாகத் தடைப்பட்டுள்ளதுடன், வீதியில் உள்ள மண்ணை அகற்றும் பணிகள் தற்போது இடம்பெற்று வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here