ஈராக் கடல் எல்லைக்குள் எண்ணெய் கப்பல்கள் மீது தாக்குதல்

69
0
Spread the love

ஈராக் எல்லைக்குட்பட்ட கடல் பகுதியில் நங்கூரமிடப்பட்டிருந்த இரண்டு வெளிநாட்டு எண்ணெய் கப்பல்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இத்தாக்குதலுக்கு ஈரான் உத்தியோகபூர்வமாகப் பொறுப்பேற்றுள்ளது.

தாக்குதலுக்குள்ளாகித் தீப்பற்றி எரிந்த கப்பல்களிலிருந்து 38 ஊழியர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாக ஈராக் துறைமுக நிறுவனத்தின் தலைவர் உறுதிப்படுத்தியுள்ளார்.

பாரசீக வளைகுடா பகுதியில் நங்கூரமிடப்பட்டிருந்த ‘Zefyros’ மற்றும் ‘Safesea Vishnu’ ஆகிய இரண்டு கப்பல்களே இவ்வாறு தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளன.

இதில் ‘Safesea Vishnu’ கப்பலானது அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட நிறுவனத்திற்குச் சொந்தமானதாகும்.

இந்தத் தாக்குதலைத் தாங்களே நடத்தியதாக ஈரானின் அரசு ஊடகமான IRIB செய்தி வெளியிட்டுள்ளது.

“நீருக்கடியில் இயங்கும் ட்ரோன் மூலம் பாரசீக வளைகுடாவில் இரண்டு எண்ணெய் கப்பல்கள் தகர்க்கப்பட்டன” என ஈரான் தெரிவித்துள்ளது. எனினும், வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட ஈரானிய படகு ஒன்று கப்பல்கள் மீது மோதியிருக்கலாம் என ஈராக் பாதுகாப்புத் தரப்பினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

தாக்குதலை அடுத்து எண்ணெய் கசிவு காரணமாக கடல் முழுவதும் தீ பரவியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும், கப்பலில் இருந்து கசிந்த எண்ணெய் காரணமாக கடல் முழுவதும் தீ பரவி வருவதாக உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இச்சம்பவத்தைத் தொடர்ந்து பாதுகாப்பு கருதி எண்ணெய் துறைமுகங்களின் செயல்பாடுகள் அனைத்தும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.

இந்தத் தாக்குதலானது ஈராக்கின் இறையாண்மையை மீறும் ஒரு செயல் என ஈராக் இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சாத் மான் தெரிவித்துள்ளார். இதற்கெதிராக சர்வதேச மட்டத்தில் சட்டப்பூர்வ நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here