ஈரானியர்களுக்கு சுற்றுலா விசா வழங்க அவுஸ்திரேலியா தற்காலிக தடை

17
0
Spread the love

ஈரானிய பிரஜைகள் சுற்றுலா விசா மூலம் அவுஸ்திரேலியாவிற்குள் நுழைவதை தற்காலிகமாக தடை
செய்ய அவுஸ்திரேலிய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அவுஸ்திரேலிய உள்நாட்டலுவல்கள் அமைச்சரினால் இன்று இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக
வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

ஈரானில் இருந்து வரும் தற்காலிக பார்வையாளர்கள், தங்களது விசா காலம் முடிந்த பின்னரும் மீண்டும்
தாயகம் திரும்புவதற்கு “இயலாத அல்லது விருப்பமில்லாத” போக்கு அதிகமாகக் காணப்படுவதே இந்தத் தீர்மானத்திற்கு காரணம் என அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்தத் தடையானது நாளை முதல் நடைமுறைக்கு வருவதுடன், அடுத்த ஆறு மாத காலத்திற்கு இது அமுலில் இருக்கும்.

அதேவேளை, அவுஸ்திரேலியாவில் வசிக்கும் பிள்ளைகளைக் கொண்டுள்ள ஈரானியர்களுக்கும், நீண்டகால விசா வைத்திருப்பவர்களுக்கும் தொடர்ந்து நாட்டிற்குள் நுழைய அனுமதி வழங்கப்படும்.

தற்போது சுமார் 7,000 ஈரானியர்கள் அவுஸ்திரேலியாவிற்கு வருகை தருவதற்காக சுற்றுலா விசாக்களைப் பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

“வேகமாக மாறிவரும் உலகளாவிய சூழ்நிலைகளுக்கு மத்தியில், தேசிய நலன் கருதி அரசாங்கம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது” என உள்நாட்டலுவல்கள் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இந்தத் தீர்மானத்திற்கு எதிர்க்கட்சி அரசியல் குழுக்களிடம் இருந்து விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இது ஒரு “அநீதியான முடிவு” என அவர்கள் தெரிவித்துள்ளனர். அண்மையில் அவுஸ்திரேலியா வந்திருந்த ஈரான் மகளிர் கால்பந்தாட்ட அணி உறுப்பினர்கள் சிலர் அரசியல் புகலிடம் கோரியது போன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழ்வதைத் தடுப்பதற்காகவே அரசாங்கம் இவ்வாறு செயற்படுவதாக அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

பொதுவாக சர்வாதிகார ஆட்சி நிலவும் நாடுகளில் இருந்து பாதுகாப்புத் தேடுபவர்கள், சுற்றுலா விசா மூலம் வருகை தந்து பின்னர் அரசியல் புகலிடம் கோருவது ஒரு சாதாரண நடைமுறையாகும் என்றும் அவர்கள் மேலும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here