மாலைதீவு ஜனாதிபதி மொஹமட் முயிசு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு சற்றுமுன்னர் இலங்கையை வந்தடைந்துள்ளார்.
அவர் இன்று (03.05) மாலை 5.35 மணியளவில் கட்டுநாயக்க விமானத்தை வந்தடைந்தார்.
மாலைதீவு ஜனாதிபதியுடன் அவரது மனைவி மற்றும் அந்த நாட்டின் 20 உயர்மட்ட அதிகாரிகளும் இந்த பயணத்தில் ஈடுபட்டுள்ளனர்
2023ஆம் ஆண்டு ஜனாதிபதியாகப் பதவியேற்றதன் பின்னர், மொஹமட் முயிசு இலங்கைக்கு மேற்கொள்ளும் முதலாவது ராஜதந்திர விஜயம் இதுவாகும்.
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அழைப்பின் பேரில் வருகை தரும் மாலைதீவு ஜனாதிபதி, எதிர்வரும் 06ஆம் திகதி வரை இலங்கையில் தங்கியிருப்பார்.
இந்த விஜயத்தின் போது, இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவு மற்றும் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது குறித்து ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுடன் அவர் இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்துவார் என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
அத்துடன், இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்தும் வகையில் 06 புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் இந்த விஜயத்தின் போது கையெழுத்திடப்படவுள்ளன.
இதேவேளை மாலைதீவு ஜனாதிபதியின் இந்த வருகையை முன்னிட்டு இன்று (03) முதல் வரும் 06ஆம் திகதி வரை கொழும்பு நகரை அண்மித்த பகுதிகளில் விசேட போக்குவரத்துத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.







