வட மாகாணத்தில் சுற்றுலாத்துறையினை நீண்டகாலத் திட்டத்தின் அடிப்படையில் அபிவிருத்தி செய்யும் நோக்கோடு, வடமாகாண சுற்றுலாப் பணியகத்தினால் முன்னெடுக்கப்பட்டு, வவுனியா பல்கலைக்கழகத்தின் வியாபாரக் கற்கைகள் பீடத்தின் உதவியுடன் தயாரிக்கப்பட்ட ஐந்தாண்டுத் திட்டத்தினை மன்னார் மாவட்ட பங்குதாரர்களுக்கு வைபவரீதியாக கையளிக்கும் நிகழ்வு நேற்று (12.06) வெள்ளிக்கிழமை பிற்பகல் 2.00 மணியளவில் மன்னார் மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்றது.
மேலதிக அரசாங்க அதிபர் எம்.பிரதீப் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில்,
வட மாகாண சுற்றுலா மேம்பாட்டு உத்தியோகத்தர் எஸ்.யோகராஜன் கலந்துகொண்டு, தயாரிக்கப்பட்ட ஐந்து ஆண்டு சுற்றுலா அபிவிருத்தி திட்டம் குறித்து விளக்கமளித்ததோடு அது தொடர்பான விடயங்கள் அடங்கிய புத்தகத்தினை மன்னாரின் ஐந்து பிரதேச செயலகங்களுக்கும் மற்றும் உள்ளூராட்சி அதிகார சபைகளுக்கும் உத்தியோகபூர்வமாக வழங்கி வைத்தார்.
இதன் போது வட மாகாண சுற்றுலாத்துறை மேம்படுத்தல் தொடர்பாக சகலந்துரையாடப்பட்டதோடு, குறிப்பாக மன்னார் மாவட்டத்தின் சுற்றுலா தலங்களை அபிவிருத்தி செய்வதில் உள்ள வாய்ப்புக்கள் மற்றும் தடைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டதுடன் மன்னாரை வட மாகாணத்தின் முன்னணி சுற்றுலா மையமாக மாற்றுவதற்கான செயற்பாடுகள், ஒருங்கிணைந்த திட்டமிடலின் அவசியம் மற்றும் உள்ளூர் சமூகங்களின் பங்களிப்பு தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.
குறித்த நிகழ்வில் மன்னார் பிரதேச செயலாளர் K.காந்தீபன்,மன்னார் மாவட்ட செயலக திட்டமிடல் பணிப்பாளர் எச். ஹலீம்தீன் உள்ளிட்ட திணைக்கள அதிகாரிகள், வட மாகாண சுற்றுலா திணைக்கள உத்தியோகத்தர்கள் சுற்றுலா வழிகாட்டிகள் மற்றும் சுற்றுலா விடுதி உரிமையாளர்கள் கலந்து கொண்டிருந்தனர்.







