விபத்துக்கள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில், “11ஆவது தேசிய விபத்துத் தடுப்பு வாரம்” நாளை (06) முதல் எதிர்வரும் 10 ஆம் திகதி வரை நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதன் அங்குரார்ப்பண விழா நாளை (06) முற்பகல் 11 மணிக்கு சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தலைமையில் சுகாதார அமைச்சின் பிரதான கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது.
அவசர விபத்துக்கள் காரணமாக வருடாந்தம் ஆயிரக்கணக்கானோர் உயிரிழப்பதுடன் இலட்சக்கணக்கானோர் காயங்களுக்கு உள்ளாவதை கருத்திற்கொண்டே இந்த விபத்துத் தடுப்பு வாரம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
அரச வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படும் நோயாளர்களில் அதிகமானோர் வீதி விபத்துக்கள், பணியிட விபத்துக்கள், நீரில் மூழ்கியவர்கள் மற்றும் வீட்டு விபத்துக்களால் பாதிக்கப்பட்டவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் சுகாதாரத் துறைக்கும் நாட்டின் சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கும் ஏற்படும் கடுமையான பாதிப்பைக் குறைப்பதே இந்தத் தேசிய வேலைத்திட்டத்தின் முதன்மை நோக்கம் என கூறப்பட்டுள்ளது.
இந்த வாரத்தில் நாடளாவிய ரீதியில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், விபத்து அபாயமுள்ள இடங்களை இனங்காணுதல் மற்றும் பாதுகாப்பான சூழலை உருவாக்குவதற்கான குறுகிய, நடுத்தர மற்றும் நீண்ட கால நடைமுறை நடவடிக்கைகள் அரச நிறுவனங்கள், கல்வி மற்றும் பாதுகாப்புத் துறைகளின் கூட்டுப் பங்களிப்புடன் செயற்படுத்தப்படவுள்ளன.







