மீண்டும் போர்க்களமான ஹோர்முஸ் – ஈரான் மீது தொடர் தாக்குதல்

76
0
Spread the love

ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணித்த வர்த்தக கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதை அடுத்து, ஈரானிய துறைமுகங்களுக்கு எதிராக அமெரிக்கா மீண்டும் முழுமையான கடற்படை முற்றுகையை விதித்துள்ளது.

இதன் காரணமாக இரு தரப்பிற்கும் இடையே நிலவிய தற்காலிக போர்நிறுத்தம் முழுமையாக முறிவடைந்துள்ளதுடன், பிராந்தியத்தில் ஒரு பெரிய போர் ஏற்படுவதற்கான கடுமையான அபாயமும் உருவாகியுள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் விதிக்கப்பட்ட இந்த முற்றுகையை, ஜூன் மாதம் எட்டப்பட்ட பேச்சுவார்த்தை உடன்படிக்கைக்குப் பிறகு நீக்குவதற்கு அமெரிக்கா நடவடிக்கை எடுத்திருந்தது. எனினும், அந்தப் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததால் ஹோர்முஸ் நீரிணையில் மீண்டும் மோதல்கள் தீவிரமடைந்துள்ளன.

இதற்கிடையில், ஹோர்முஸ் வழியாக பயணிக்கும் கப்பல்களிலிருந்து 20% கட்டணம் வசூலிக்க அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் முதலில் திட்டமிட்டிருந்த போதிலும், வளைகுடா பிராந்திய நட்பு நாடுகளின் தலைவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க அவர் அந்த முடிவை மாற்றிக்கொண்டார்.

கப்பல்களுக்கு கட்டணம் விதிப்பதற்குப் பதிலாக, அந்த நாடுகள் அமெரிக்காவில் பில்லியன் கணக்கான டொலர்களை பெருமளவில் முதலீடு செய்ய ஒப்புக்கொண்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கடற்படை முற்றுகையை விதிப்பதற்கு முன்னதாக, ஈரானின் ஏவுகணைகள், ட்ரோன்கள் மற்றும் கடலோர காவல்படை மையங்களை இலக்கு வைத்து அமெரிக்க இராணுவம் கடுமையான வான்வழித் தாக்குதல்களை நடத்தியிருந்தது.

இத்தாக்குதலை ஈரான் ஒப்புக்கொண்டுள்ளதுடன், தங்களது அதிகாரத்தை அழிக்க அமெரிக்கா முயற்சிப்பதாகக் குறிப்பிட்டுள்ளது.

உலகளாவிய எண்ணெய் மற்றும் எரிவாயு தேவையில் 20% ஹோர்முஸ் நீரிணை வழியாகவே கொண்டு செல்லப்படுவதால், உலக அளவில் பல நெருக்கடிகள் தோன்றியுள்ளன.

கடந்த பெப்ரவரி மாதம் அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரான் மீது தாக்குதல் நடத்தியபோது இந்த வழித்தடம் முடங்கியது. இதனால் உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை வேகமாக உயர்ந்தது, பின்னர் தொடங்கப்பட்ட அமைதி பேச்சுவார்த்தைகளால் நிலைமை சுமுகமானது. எனினும், அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே மீண்டும் போர் மோதல்கள் தீவிரமடைந்துள்ளதால், உலக சந்தையில் எண்ணெய் விலை மீண்டும் உயர்ந்து வருகிறது.

தற்போது நிலவும் கடுமையான போர்ச் சூழல் காரணமாக, சர்வதேச விமான சேவைகளுக்கும் எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here