யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றினால் 24 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட கைதி ஒருவர், யாழ்ப்பாணம் இளவாலை பகுதியில் வைத்து மீளக் கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் இளவாலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 14 வயது சிறுமியை 2021ஆம் ஆண்டு பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட குறித்த நபருக்கு, 24 வருட சிறைத்தண்டனை விதித்து யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் கடந்த வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்திருந்தது.
அத்துடன், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 5 இலட்சம் ரூபாய் நஷ்டஈடு வழங்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. நஷ்டஈட்டை வழங்கத் தவறினால் மேலும் மூன்று வருட சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், மறுநாள் சனிக்கிழமை திடீர் சுகவீனம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்த கைதி, சிறைக்காவலர்களின் பாதுகாப்புடன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
எனினும், மறுநாள் ஞாயிற்றுக்கிழமை மதியம் சிறைக்காவலர்களின் பாதுகாப்பிலிருந்து தப்பி வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளார்.
கைதி தப்பியோடியதைத் தொடர்ந்து சிறைக்காவலர்கள் மற்றும் யாழ்ப்பாணம் பொலிஸாரின் விசேட குழுவினர் இணைந்து தீவிர தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
இதன்போது, இளவாலை பகுதியில் உள்ள பற்றைக்காட்டிற்குள் மறைந்திருந்த குறித்த கைதி கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட நபரிடம் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
மேலும், சிறைக்காவலர்களின் பாதுகாப்பில் இருந்து தப்பிச் சென்றமை தொடர்பில் அவருக்கு எதிராக தனியான வழக்கொன்றைத் தாக்கல் செய்து நீதிமன்றில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளையும் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.







