முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ இன்று (04) காலை இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவான CIABOC அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
வாக்குமூலம் ஒன்றைப் பெற்றுக்கொள்வதற்காக இன்று காலை ஆணைக்குழுவில் முன்னிலையாகியிருந்த நிலையில், அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொல்கொல்ல மகிந்த ராஜபக்ஷ அரங்கத்திற்கான கதிரைகள் கொள்வனவு செய்ததில் இடம்பெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் தொடர்பான விசாரணையின் அடிப்படையிலேயே இந்தக் கைது இடம்பெற்றுள்ளதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
கதிரைகள் கொள்வனவு செய்யப்பட்டபோது, தேவையான தரநிலைகளை பூர்த்தி செய்த குறைந்த விலையிலான கேள்விப் பத்திரத்தை முன்வைத்த நிறுவனத்திற்குப் பதிலாக, Design Point (Pvt) Ltd. நிறுவனத்திடம் இருந்து கதிரைகளை கொள்வனவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக மத்திய பொறியியல் ஆலோசனைப் பணியகத்திற்கு (CECB) ரூ.7,973,114.50 நிதி இழப்பு ஏற்பட்டதாக CIABOC தெரிவித்துள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பில் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ ஊழல் குற்றச்சாட்டின் பேரிலும், Design Point நிறுவனத்தின் உரிமையாளர் ஹேமந்த லலித் டி சில்வா, குறித்த குற்றத்திற்கு உதவி செய்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரிலும் கைது செய்யப்பட்டுள்ளனர்
இருவரும் இன்று கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.







