இந்திய மீனவர் பிரச்சினை தொடர்பில் எதிர்வரும் செப்டெம்பர் 25ஆம் திகதி இந்திய அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படவுள்ளதாக கடற்றொழில் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தின் பின்னர் இன்று (04) ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
எதிர்வரும் 25ஆம் திகதி இலங்கை அதிகாரிகள் இந்தியாவுக்குச் சென்று இரு நாட்டு மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், இந்திய இழுவைப்படகுகள் இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைதல், கடல் வளங்கள் அழிக்கப்படுதல் மற்றும் வடபகுதி மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுதல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இந்தப் பேச்சுவார்த்தை கச்சதீவு தொடர்பானது அல்ல எனவும் அமைச்சர் தெளிவுபடுத்தினார்.
அதேவேளை, கச்சதீவு தொடர்பில் தமிழக அரசியல்வாதிகள் அவ்வப்போது வெளியிடும் கருத்துக்கள் தொடர்ச்சியான அரசியல் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாகும் எனக் குறிப்பிட்ட அமைச்சர், சர்வதேச சட்டங்களின்படியும் சர்வதேச எல்லை நிர்ணயங்களின்படியும் கச்சதீவு இலங்கைக்குச் சொந்தமானது எனத் தெரிவித்தார்.
இதனிடையே, எதிர்க்கட்சித் தலைவர் பதவி தொடர்பில் சஜித் பிரேமதாச மற்றும் ரணில் விக்கிரமசிங்க தரப்புகளுக்கு இடையில் இடம்பெறும் போட்டி குறித்து கருத்து தெரிவித்த அமைச்சர், மக்களின் கவனத்தை தங்கள்மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளிலிருந்து திசைதிருப்புவதற்காகவே இந்த விவகாரம் முன்னெடுக்கப்படுவதாக விமர்சித்தார்.
எதிர்க்கட்சிகளிடம் நாட்டை முன்னேற்றுவதற்கான தெளிவான வேலைத்திட்டங்கள் இல்லை எனவும், அரசாங்கம் மக்கள் நலன் சார்ந்த நடவடிக்கைகளைத் தொடர்ந்து முன்னெடுத்து வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.







