2025/26 பொருளாதாரக் கணக்கெடுப்பு: விவசாயத் தகவல் சேகரிப்புப் பணிகள் ஆரம்பம்!

72
0
Spread the love

தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தினால் பத்து ஆண்டுகளுக்கு ஒருமுறை முன்னெடுக்கப்படும் பொருளாதாரக் கணக்கெடுப்பின் கீழ், 2025/26ஆம் ஆண்டுக்கான விவசாய நடவடிக்கைகள் தொடர்பான தகவல்களைச் சேகரிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இதற்கமைய, தகவல் சேகரிப்புப் பணிகள் இம் மாதம் முதலாம் திகதி முதல் டிசம்பர் மாதம் 14ஆம் திகதி வரை முன்னெடுக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கணக்கெடுப்பின் கீழ், விவசாயப் பயிர்ச்செய்கை, கால்நடை வளர்ப்பு மற்றும் பயிர்ச் செய்கைக்காகப் பயன்படுத்தப்படும் நிலங்கள் தொடர்பான தகவல்கள் சேகரிக்கப்படவுள்ளன.

நாடு முழுவதையும் உள்ளடக்கும் வகையில், விவசாயத் துறையின் கட்டமைப்பு தொடர்பான தகவல்கள் கிராம உத்தியோகத்தர் பிரிவு மட்டம் வரை சேகரிக்கப்படவுள்ளன. இதன்போது சேகரிக்கப்படும் தகவல்கள் செயலாக்கப்பட்டு, உரிய தரப்பினருக்கு விநியோகிக்கப்படும்.

ஒரு பயிர்ச்செய்கை ஆண்டுக்குரிய விவசாயத் தகவல்களை அடிப்படையாகக் கொண்டு இக்கணக்கெடுப்பு முன்னெடுக்கப்படவுள்ளது.

தேசிய மற்றும் பிரதேச மட்டங்களில் விவசாயத் துறை சார்ந்த அரசாங்கக் கொள்கைகள் மற்றும் அபிவிருத்தித் திட்டங்களை வகுப்பதற்குத் தேவையான துல்லியமான தகவல்களைப் பெற்றுக்கொள்வது இக்கணக்கெடுப்பின் முக்கிய நோக்கமாகும்.

அத்துடன், கிராம உத்தியோகத்தர் பிரிவு மற்றும் உள்ளூராட்சி மன்ற மட்டங்களில் தரவுப் பயனாளர்களின் தேவைகளுக்கு ஏற்ப தகவல்களை வழங்குதல், நாட்டின் பொருளாதாரக் கட்டமைப்பை அடையாளம் காணுதல் மற்றும் பொருளாதாரச் சுட்டிகளின் துல்லியத்தன்மையை மேம்படுத்துதல் ஆகியவற்றுக்கும் இக்கணக்கெடுப்பு உதவுமென எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை, கணக்கெடுப்பின்போது சேகரிக்கப்படும் தகவல்களின் இரகசியத்தன்மையை முழுமையாகப் பாதுகாப்பதற்குத் தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் உறுதிபூண்டுள்ளது.

இதற்கமைய, கணக்கெடுப்பின்போது பெறப்படும் தனிப்பட்ட தகவல்களை எந்தவொரு நபருக்கோ அல்லது நிறுவனத்திற்கோ வெளியிட முடியாது என்பதுடன், கணக்கெடுப்பு அட்டவணைகளில் உள்ள தகவல்களை நீதிமன்றத்தில் சான்றாகச் சமர்ப்பிக்கவும் முடியாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகவல் சேகரிப்பில் ஈடுபடும் உத்தியோகத்தர்கள் வீடுகள் மற்றும் நிறுவனங்களுக்குச் சென்று, விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடும் அலகுகளை அடையாளம் காண்பதுடன், விவசாயக் குழுக்களுடன் நேர்காணல்களை நடத்தி உரிய தகவல்களைச் சேகரிக்கவுள்ளனர்.

இந்தக் கணக்கெடுப்பின் மூலம் நாட்டின் விவசாயத் துறை தொடர்பான துல்லியமான தரவுகளைப் பெற்றுக்கொள்வதுடன், எதிர்கால விவசாயக் கொள்கைகள் மற்றும் அபிவிருத்தித் திட்டங்களைத் திட்டமிடுவதற்குத் தேவையான அடிப்படைத் தகவல்களையும் பெற்றுக்கொள்ள முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here