பல்கலைக்கழகங்களில் தொடரும் நெருக்கடி- தொழிற்சங்க நடவடிக்கைகளை தீவிரப்படுத்த FUTA முடிவு

75
0
Spread the love

அரசு பல்கலைக்கழக அமைப்பில் நிலவும் பிரச்சினைகளுக்கு இதுவரை உரிய தீர்வுகள் கிடைக்காததால், எதிர்வரும் நாட்களில் தொழிற்சங்க நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்தவுள்ளதாகப் பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கங்களின் சம்மேளனம் (FUTA) அறிவித்துள்ளது.

இது குறித்துச் சம்மேளனத்தின் ஊடகப் பேச்சாளரும், சிரேஷ்ட விரிவுரையாளருமான சாருதத்த இலங்கசிங்க கருத்துத் தெரிவிக்கையில்,

கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்தப் பிரச்சினைகள் குறித்துத் தொடர்ச்சியாகக் கலந்துரையாடப்பட்ட போதிலும், அரசாங்கத்திடமிருந்து இதுவரை எந்தவிதமான ஆக்கபூர்வமான தீர்வுகளும் வழங்கப்படவில்லை எனச் சுட்டிக்காட்டினார்.

தற்போது அரசு பல்கலைக்கழக அமைப்பு தாங்க முடியாத அளவிற்குப் பல்வேறு பெரும் நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்துள்ளது. குறிப்பாக, உயர்தகுதி வாய்ந்த விரிவுரையாளர்கள் பல்கலைக்கழகங்களை விட்டு வெளியேறுவதுடன், புதிய நியமனங்களும் இடம்பெறாத காரணத்தினால் அரச கல்வித் தரம் கடுமையாக வீழ்ச்சியடைந்து வருவதாக அவர் எச்சரித்துள்ளார்.

தற்போதைய நெருக்கடிகளுக்குத் தீர்வு காண்பதற்காகப் பிரதமரையும் கல்வி அமைச்சரையும் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்திய போதிலும், அவற்றின் மூலம் எந்தவொரு தீர்வும் எட்டப்படவில்லை. இதனையடுத்து, பல்கலைக்கழக மானியங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் மாணவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து விவாதிப்பதற்காக ஜனாதிபதிக்கும் பிரதி நிதி அமைச்சருக்கும் சுமார் இரண்டு வாரங்களுக்கு முன்னர் கடிதங்கள் அனுப்பப்பட்டிருந்தன. எனினும், இதுவரை அவற்றுக்கு எந்தவொரு பதிலோ அல்லது பேச்சுவார்த்தைக்கான வாய்ப்போ கிடைக்கவில்லை என்று சிரேஷ்ட விரிவுரையாளர் சாருதத்த இலங்கசிங்க மேலும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here