வடக்கு மற்றும் மலையக ரயில் சேவைகள் குறைப்பு – ரயில் நிலைய அதிபர்கள் சங்கம்

150
0
Spread the love

வடக்கு மற்றும் மலையக ரயில் பாதைகளில் இயங்கி வந்த ரயில் சேவைகளின் எண்ணிக்கை கணிசமாகக் குறைக்கப்பட்டுள்ளதால் பயணிகள் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாகியிருப்பதாக ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

டித்வா’ சூறாவளிப் பாதிப்புகளுக்கு முன்னர் வடக்கு பாதையில் நாளொன்றுக்கு 18 ரயில் சேவைகள் இயங்கி வந்தன. ஆனால், தற்போது அது 8 சேவைகளாகக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகச் சங்கத்தின் செயலாளர் கசுன் சாமர ஜெயசேகர தெரிவித்தார்.

குறிப்பாக புதன்கிழமைகளில், நகரங்களுக்கு இடையிலான அதிவேக ரயில்கள் (Intercity Express) மற்றும் இரவு அஞ்சல் ரயில்களைத் தவிர, சாதாரண பயணிகள் பயணிப்பதற்கு வேறு ரயில்கள் எதுவும் இயக்கப்படுவதில்லை. அத்துடன், ‘யாழ் தேவி’ கடுகதி ரயிலும்கூட தினமும் இயக்கப்படாமல் ஒரு நாள் விட்டு ஒரு நாளே இயக்கப்படுவதாக அவர் சுட்டிக்காட்டினார்.

அதேபோன்று, மலையக ரயில் பாதையில் கொழும்பு கோட்டையிலிருந்து பதுளை, மாத்தளை, கண்டி மற்றும் ஹட்டன் வரை நாளொன்றுக்கு 42 சரக்கு மற்றும் பயணிகள் ரயில் சேவைகள் இயங்கி வந்தன. ஆனால், தற்போது அதில் 8 சேவைகள் மட்டுமே இயக்கப்பட்டு வருவதோடு, எஞ்சிய 34 சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ளன.

கடந்த மாதத்தில் கம்பளை வரையிலான ரயில் போக்குவரத்து மீண்டும் தொடங்கப்பட்டதைத் தொடர்ந்து, மலையகப் பாதையின் போக்குவரத்தை வழமைக்குக் கொண்டு வருமாறு சங்கத்தின் சார்பில் தொடர்ந்து கோரிக்கை விடுக்கப்பட்ட போதிலும், இதுவரை அதற்குச் சாதகமான பதில் எதுவுமில்லை என்றும் செயலாளர் கசுன் சாமர ஜெயசேகர மேலும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here