மூத்த சட்டத்தரணியும், அரசியல் ஆய்வாளரும், எழுத்தாளரும், கல்வியாளருமான சி.அ. ஜோதிலிங்கம் தனது 70ஆவது வயதில் கடந்த 09.10.2026 அன்று காலமானார்.
அவரது மறைவுக்குப் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கம் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளது.
தமிழ்த் தேசிய அரசியல் சிந்தனைப் பரப்பில் ஆழமான பங்களிப்பை வழங்கிய ஜோதிலிங்கம், யாழ்ப்பாணம் குப்பிழானைப் பிறப்பிடமாகக் கொண்டவர். 1970ஆம் ஆண்டு பல்கலைக்கழக அனுமதிக்கான தரப்படுத்தல் முறைக்கு எதிராக உருவான தமிழ் மாணவர் பேரவையின் ஆரம்பகால உறுப்பினராகப் பங்கேற்றதன் மூலம் தனது அரசியல் பயணத்தை ஆரம்பித்தார்.
ஈழத்தமிழர் அரசியல், தமிழ்த் தேசியம், சர்வதேச அரசியல் மற்றும் புவிசார் அரசியல் தொடர்பாகப் பல ஆய்வுக் கட்டுரைகளையும் நூல்களையும் வெளியிட்டுள்ள அவர், மக்களின் அரசியல் விழிப்புணர்வை மேம்படுத்துவதில் குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்துள்ளார்.
அத்துடன், மலையக மக்களின் உரிமைகள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் அரசியல், சமூகப் பிரச்சினைகள் தொடர்பான விவாதங்களிலும் அவர் அக்கறையுடன் பங்களித்துள்ளார்.
அவரது மறைவு தமிழ்த் தேசிய அரசியல் ஆய்வுலகிற்கும், கல்வியியல் துறைக்கும், சமூகச் செயற்பாட்டுத் தளத்திற்கும் ஈடுசெய்ய முடியாத இழப்பாகும் என பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கம் தெரிவித்துள்ளது.
மேலும், அவரது குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துள்ளதுடன், தமிழ்ச் சமூகத்தின் அரசியல் விழிப்புணர்வுக்காக அவர் ஆற்றிய பணிகளையும் அறிவுசார் பங்களிப்புகளையும் மரியாதையுடன் நினைவுகூர்ந்துள்ளது.







