கொழும்பில் ஜனாதிபதி செயலகம் முன்பாகத் திரண்ட பிக்குகள்! ஞானசார தேரரை விடுவிக்கக் கோரி பேரணி

66
0
Spread the love

சிறைத்தண்டனை அனுபவித்து வரும் கலகொடஅத்தே ஞானசார தேரரை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி முன்னெடுக்கப்பட்ட பாதயாத்திரை, இன்று கொழும்பிலுள்ள ஜனாதிபதி செயலகத்தை வந்தடைந்ததைத் தொடர்ந்து அப்பகுதியில் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

 

பௌத்த பிக்குகளின் தலைமையில் முன்னெடுக்கப்பட்ட இந்தப் பேரணியில் பங்கேற்றவர்கள், ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாகப் பிரித் பாராயணத்தில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

 

கடந்த ஒக்டோபர் 10ஆம் திகதி கண்டியிலுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க ஸ்ரீ தலதா மாளிகை வளாகத்திலிருந்து இந்தப் பாதயாத்திரை ஆரம்பமானது.

 

கண்டியிலிருந்து கடுகன்னாவ, கேகாலை, வரக்காபொல, நிட்டம்புவ மற்றும் கடவத்தை ஊடாகப் பயணித்த பேரணி, இன்று கொழும்பை வந்தடைந்துள்ளது.

 

ஆரம்பத்தில், ஞானசார தேரர் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறைச்சாலைக்கு முன்பாகப் பேரணியை நிறைவு செய்யத் திட்டமிடப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. எனினும், பின்னர் பேரணியில் பங்கேற்றவர்கள் ஜனாதிபதி செயலகத்தை நோக்கிப் பயணித்துள்ளனர்.

 

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சிறைத்தண்டனை அனுபவித்து வரும் ஞானசார தேரருக்கு சிறைச்சாலை உடை அணிவிக்கப்பட்ட விவகாரம் தொடர்பில் எதிர்ப்புத் தெரிவித்தும், அவரை விடுதலை செய்யக் கோரியும் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.

 

பேரணியை முன்னிட்டு ஜனாதிபதி செயலகத்திற்கு அருகில் பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here