எதிர்வரும் ஒக்டோபர் 20 ஆம் திகதி முதல் 23ஆம் திகதி வரை பாராளுமன்றம் அமர்வுக்குச் செயற்படவுள்ளதாகப் பாராளுமன்றத்தின் செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் இன்று (16) இடம்பெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்திலேயே (Committee on Parliamentary Business) அடுத்த வாரத்திற்கான பாராளுமன்ற அமர்வுகள் மற்றும் அட்டவணைகள் தொடர்பான தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன.
நாளாந்த அமர்வு நேர அட்டவணை விபரங்கள்:
பாராளுமன்றம் கூடும் அனைத்து நாட்களிலும் முற்பகல் 9.30 மணி முதல் மாலை வரை பிரதான அலுவல்களுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளன:
மு.ப 9.30 – மு.ப 10.00: நிலையியற் கட்டளை 22(1) முதல் (6) வரையான பாராளுமன்ற வழக்கமான அலுவல்கள்.
மு.ப 10.00 – மு.ப 11.00: வாய்மூல விடைகளுக்கான வினாக்கள் (Questions for Oral Answers).
மு.ப 11.00 – மு.ப 11.30: பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான விசேட கேள்விகள்.
தினசரி விவாதங்கள் மற்றும் பிரேரணைகள்:
ஒக்டோபர் 20 (செவ்வாய்க்கிழமை): மு.ப 11.30 மணி முதல் பி.ப 5.30 மணி வரை எதிர்க்கட்சியினால் கொண்டுவரப்படவுள்ள சபை ஒத்திவைப்புப் பிரேரணை மீதான விவாதம் இடம்பெறவுள்ளது.
ஒக்டோபர் 21 (புதன்கிழமை): மு.ப 11.30 மணி முதல் பி.ப 5.00 மணி வரை பொதுத் தனிசு முகாமைத்துவச் சட்டம் மற்றும் குறைநிரப்பு மதிப்பீடு என்பவற்றை அங்கீகரிப்பதற்கான விவாதம் நடத்துவற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து பி.ப 5.00 மணிக்கு 5 சட்டரீதியாக நிறுவப்பட்ட நிறுவனங்கள் குறித்த ஆண்டறிக்கைகள் விவாதம் இன்றி அங்கீகரிக்கப்படவுள்ளதுடன், பி.ப 5.00 மணி முதல் 5.30 மணி வரை ஒத்திவைப்பு நேரக் கேள்விகளுக்காக நேரம் ஒதுக்கப்படும்.
ஒக்டோபர் 22 (வியாழக்கிழமை): மு.ப 11.30 மணி முதல் பி.ப 5.00 மணி வரை நஞ்சுகள், அபின் மற்றும் அபாயகரமான அவுடதங்கள் தொடர்பான இரண்டு திருத்தச் சட்டமூலங்கள் (இலக்கம் 70 மற்றும் 80) இரண்டாவது மதிப்பீட்டு விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன. அதனைத் தொடர்ந்து குறிப்பிட்ட நிறுவனங்களின் ஆண்டறிக்கைகள் விவாதமின்றி நிறைவேற்றப்பட்டு, பி.ப 5.00 மணி முதல் 5.30 மணி வரை எதிர்க்கட்சியின் ஒத்திவைப்பு நேரப் பிரேரணை விவாதிக்கப்படும்.
ஒக்டோபர் 23 (வெள்ளிக்கிழமை): மு.ப 11.30 மணி முதல் பி.ப 5.00 மணி வரை விசர்நாய்கடி நோயை ஒழித்தல் மற்றும் நாய்களைப் பதிவுசெய்தல் சட்டமூலம் மீதான இரண்டாவது மதிப்பீட்டு விவாதம் இடம்பெறவுள்ளது. இதன் பின்னர் ஆளுங்கட்சியின் ஒத்திவைப்பு நேரப் பிரேரணைக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.







