இலங்கைக்குக் கடத்துவதற்காகப் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 135 கோடி இந்திய ரூபாய் மதிப்பிலான மெத்தம்பெட்டமைன் (Methamphetamine) போதைப்பொருளுடன், தமிழக வெற்றிக் கழக (TVK) நிர்வாகி உட்பட 4 பேரை இந்திய மத்திய வருவாய் புலனாய்வுத் துறை (DRI) அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
சோதனையும் கைது நடவடிக்கையும்
நாகப்பட்டினத்திலிருந்து இலங்கைக்கு சர்வதேச அளவில் தடைசெய்யப்பட்ட மெத்தம்பெட்டமைன் கடத்தப்படுவதாகத் திருச்சி மண்டல வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகளுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில், வேளாங்கண்ணி அருகே பிரதாபராமபுரத்தைச் சேர்ந்த சுகன் (27) என்பவரது வீட்டில் 16 அதிகாரிகள் அடங்கிய குழுவினர் சோதனை மேற்கொண்டனர்.
அங்கு மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் அடிப்படையில், வேளாங்கண்ணி கீழப்பிடாகை பகுதியைச் சேர்ந்த நாகை மாவட்டத் தவெக செயற்குழு உறுப்பினரும் வழக்கறிஞருமான பூபாலன் (42) என்பவர் இந்த சர்வதேசக் கடத்தலின் முதன்மை மூளையாகச் செயல்பட்டது தெரியவந்தது. இதையடுத்து பூபாலனின் வீட்டில் அதிரடி சோதனை நடத்திய அதிகாரிகள், அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த போதைப்பொருட்களைக் கைப்பற்றினர்.
இச்சம்பவத்தில் பூபாலனின் சகோதரர் பார்த்திபன் (29) மற்றும் சதீஷ் (30) ஆகியோருக்கும் தொடர்பு இருப்பது கண்டறியப்பட்டது. இதன் மூலம் பூபாலன், சுகன், பார்த்திபன், சதீஷ் ஆகிய 4 பேரையும் அதிகாரிகள் கைது செய்தனர்.
பூபாலனின் மனைவி இலங்கையைச் சேர்ந்தவர் என்பதால், அதனைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு இலங்கையில் உள்ள போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் அவர் தொடர்ப ஏற்படுத்தியிருக்கலாம் எனக் சந்தேகிக்கப்படுகிறது. கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 135 கிலோ எடையுள்ள மெத்தம்பெட்டமைன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதன் சர்வதேசச் சந்தை மதிப்பு 100 கோடி முதல் 135 கோடி இந்திய ரூபாய் வரை இருக்கும் என அதிகாரிகள் கணக்கிட்டுள்ளனர்.
முன்னதாக ராமநாதபுரத்தைச் சேர்ந்த நபர் ஒருவரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் தொடர்ச்சியாகவே இவர்கள் கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டனர். அத்துடன், கனடாவில் வசிக்கும் இலங்கைத் தமிழர் ஒருவர் வேதாரண்யம் விடுதியில் தங்கி, கோடியக்கரை மீனவரிடம் ₹50,000 கொடுத்துப் படகையும், காரைக்காலில் இருந்து ₹1 லட்சம் மதிப்பிலான அதிவேக எஞ்சினையும் வாங்கிச் சென்றது தொடர்பாக அளிக்கப்பட்ட தகவலின் அடிப்படையிலும் இந்தத் தொடர் விசாரணை முடுக்கிவிடப்பட்டது.
போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தவெக நிர்வாகி பூபாலன் கைது செய்யப்பட்ட தகவல் வெளியானதைத் தொடர்ந்து, கட்சியின் கட்டுப்பாட்டையும் கண்ணியத்தையும் மீறிச் செயல்பட்டதாகக் கூறி, அவரை அடிப்படை உறுப்பினர் பதவி உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கித் தமிழக வெற்றிக் கழகத்தின் நாகை மாவட்டச் செயலாளர் சுகுமாறன் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.







