இலங்கையிலிருந்து வெளிநாட்டு முதலீடுகள் வெளியேறுவது நாட்டின் பொருளாதாரத்திற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கவலை வெளியிட்டுள்ளார்.
கொழும்புத் துறைமுகத்தில் முன்னெடுக்கத் திட்டமிடப்பட்டிருந்த தளவாட மையத் திட்டத்திலிருந்து சீன நிறுவனம் விலகியமை மற்றும் சர்வதேச நிறுவனங்களின் முதலீடுகள் தொடர்பில் வெளியாகும் தகவல்கள் குறித்து அவர் தனது எக்ஸ் சமூக வலைத்தளப் பதிவில் கருத்து வெளியிட்டுள்ளார்.
கொழும்புத் துறைமுகத்தில் 392 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் அமைக்கப்படவிருந்த தளவாட மையத் திட்டத்திலிருந்து China Merchants Port Holdings நிறுவனம் விலகியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இந்தத் திட்டம் கைவிடப்பட்டமை தொடர்பில் இலங்கைத் துறைமுக அதிகார சபைக்கு 21.9 மில்லியன் அமெரிக்க டொலர் இழப்பீடு வழங்குவதற்கான உடன்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், HSBC Global Service Centre நிறுவனம் தனது சேவைகளை பிலிப்பைன்ஸுக்கு மாற்றுவது குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளதாகவும் சஜித் பிரேமதாச சுட்டிக்காட்டியுள்ளார். இவ்வாறு மாற்றம் இடம்பெற்றால், இலங்கையில் சுமார் 3,000 நேரடி வேலைவாய்ப்புகளும் 500 மறைமுக வேலைவாய்ப்புகளும் பாதிக்கப்படக்கூடும் என அவர் தெரிவித்துள்ளார். இந்த மாற்றம் 2027 டிசம்பருக்குள் நிறைவடையலாம் எனத் தகவல்கள் வெளியாகியுள்ள போதிலும், அது தொடர்பான செய்தி உண்மையாக இருக்காது எனத் தாம் நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அந்நிய முதலீடுகளை நாட்டுக்குள் ஈர்ப்பதற்குப் பதிலாக முதலீடுகள் வெளியேறுவதைத் தடுக்க முடியாத நிலை தொடர்ந்தால், அது பொருளாதார வளர்ச்சிக்கும் வேலைவாய்ப்புகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என அவர் எச்சரித்துள்ளார்.
எனவே, வெளிநாட்டு முதலீட்டாளர்களின் நம்பிக்கையைப் பாதுகாப்பதற்கும் புதிய முதலீடுகளை ஈர்ப்பதற்கும் அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் வலியுறுத்தியுள்ளார்.







