ஏறாவூர் பகுதியைச் சேர்ந்த தேவதாஸ் சுரேஷ்குமார் என்பவரை கடந்த 2008 ஆம் ஆண்டு ஜூன் 19 ஆம் திகதி வானில் கடத்திச் சென்று கொலை செய்த வழக்கில், குற்றவாளிகளாகக் காணப்பட்ட 8 பேருக்கு மட்டக்களப்பு மேல் நீதிமன்றம் இன்று (19) மரண தண்டனை விதித்துள்ளது. மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி ரி.ஜே. பிரபாகரன் வழங்கிய இந்தத் தீர்ப்பில், தண்டனைச் சட்டக்கோவை பிரிவு 140 இன் கீழ் சட்டவிரோதக் கூட்டத்தில் உறுப்பினராக இருந்தமைக்காக 6 மாத சாதாரண சிறைத்தண்டனையும், ஆட்கொலை தொடர்பான குற்றச்சாட்டுகளுக்காக மரண தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளதோடு, வழக்கின் 9 ஆவது பிரதிவாதி விடுதலை செய்யப்பட்டுள்ளார். தர்மலிங்கம் இளமாரன், வீரக்குட்டி சேகர், மகேந்திரராஜா வினோராஜ், யோகராசா ஜெயக்குமார், சிறிஸ்கந்தராஜா நாகநாதன், சொக்கலிங்கம் நாகராசா, அருணாச்சலம் ராமச்சந்திரன் மற்றும் கோவிந்தன் பிரதீபன் ஆகிய 8 பேரும் தீர்ப்பைத் தொடர்ந்து மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.







