கரைதுறைப்பற்று பிரதேச சபையின் வெற்றிடமாக இருந்த உபதவிசாளர் பதவிக்கான தெரிவு நேற்று (23.11.2026) காலை வடமாகாண உள்ளூராட்சி ஆணையாளர் சாம்பசிவம் சுதர்சன் தலைமையில் நடைபெற்றது.
இதன்போது உபதவிசாளர் பதவிக்காக ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியைச் சேர்ந்த ஞானதாஸ் யூட்பிரசாந் மற்றும் சுயேட்சையாகப் போட்டியிட்ட வல்லிபுரம் வசந்தராசா ஆகிய இருவரின் பெயர்களும் முன்மொழியப்பட்டன.
தெரிவின்போது இரகசிய வாக்கெடுப்பா அல்லது பகிரங்க வாக்கெடுப்பா நடத்துவது தொடர்பில் உறுப்பினர்களிடம் கருத்துக் கோரப்பட்டது. இதன்போது இரகசிய வாக்கெடுப்புக்கு ஆதரவாக 9 வாக்குகளும், பகிரங்க வாக்கெடுப்புக்கு ஆதரவாக 11 வாக்குகளும் கிடைத்தன. இதனையடுத்து பகிரங்க வாக்கெடுப்பு மூலம் உபதவிசாளர் தெரிவு இடம்பெற்றது.
இதில் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியைச் சேர்ந்த ஞானதாஸ் யூட்பிரசாந் 11 வாக்குகளைப் பெற்று உபதவிசாளராகத் தெரிவு செய்யப்பட்டார். சுயேட்சையாகப் போட்டியிட்ட வல்லிபுரம் வசந்தராசா 9 வாக்குகளைப் பெற்றார்.
குறித்த உபதவிசாளர் தெரிவுக்கான விசேட கூட்டத்தில் பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளர் தெ. ரதீஸ்வரன், கரைதுறைப்பற்று பிரதேச சபையின் செயலாளர் ஜெ. செல்வன், தவிசாளர் இமக்குலேற்றா புஸ்பானந்தன், உள்ளூராட்சி திணைக்கள உத்தியோகத்தர்கள், உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்
குறித்த கூட்டத்துக்கு ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் மாவட்ட நிறைவேற்று இணைப்பாளர் க.சிவநேசன், முன்னாள் கரைதுறைப்பற்று பிரதேச சபைத் தவிசாளர் க. விஜிந்தன் மற்றும் தமிழரசுக் கட்சியின் மத்திய குழு உறுப்பினர் பீற்றர் இளஞ்செழியன் உள்ளிட்டோர் பார்வையாளர்களாக கலந்துகொண்டிருந்தனர்.







