மன்னார் அடம்பன் மத்திய மகா வித்தியாலயத்தில் சிரமதானப் பணி (வீடியோ)

124
0
Spread the love

புதிய அரசாங்கத்தின் "கிளீன் ஸ்ரீலங்கா" திட்டத்திற்கமைவாக சூழல் உணர்வு மிக்க சமூகப் பொறுப்புடன் கூடிய கல்வி சுற்றாடலை நிர்மாணித்தல் என்னும் கருப்பொருளில், துப்புரவு பணி மன்னார் அடம்பன் மத்திய மகா வித்தியாலயத்தில் நேற்றைய தினம்(09.07) வியாழக்கிழமை காலை 8.30 மணியளவில் நடைபெற்றது.

மன்னார் தள்ளாடி 54 ஆவது காலாட்படைப் பிரிவின் ஏற்பாட்டில், அடம்பன் மத்திய மகா வித்தியாலயத்தின் அதிபர் மைக்கல் கிறிஸ்டியான் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில், 54 வது படைப்பிரிவின் அதிகாரி மேஜர் ஜெனரல் A.M.C அபயகோன் , 541 வது படை பிரிவின் அதிகாரி, பிரிகேடியர் I.P. ஜெயசிங்க ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டதுடன், லெப்டினட் கேணல் A.G.C. குமார அரபேகொட உள்ளிட்ட இராணுவ அதிகாரிகள், பாடசாலையின் பிரதி அதிபர்கள் ஆசிரியர்கள்,மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

இந்நிகழ்ச்சித் திட்டம் குறித்து கருத்து தெரிவித்த பாடசாலையின் அதிபர்,

"பாதுகாப்பான சுற்றாடலை உருவாக்கும் ஒரே நோக்கத்துடன் இன்றைய தினம் இந்த துப்புரவு பணியை நாம் மேற்கொண்டு இருக்கிறோம். டெங்கு மலேரியா போன்ற நோய்கள் வேகமாக பரவி வரும் இந்த காலப்பகுதியில் நாம் வாழுகின்ற சூழலை சுத்தமாக வைத்திருக்க வேண்டியது நமது கடமை.அந்த வகையிலேயே நாம் இன்றைய தினம் செயற்பட்டுக் கொண்டிருக்கிறோம்.

இராணுவத்தை பொறுத்தவரையில், மீள் குடியேற்றத்தின் பின், 2010 ஆம் ஆண்டிலிருந்து இன்று வரை எமது பாடசாலைக்குப் பல வழிகளில் உதவிகளை வழங்கி வருகின்றனர்.

குறிப்பாகக் கூடைப்பந்து மைதானம் அமைத்ததில் இருந்து, பல நிகழ்வுகளுக்கும் ராணுவத்தினர் தங்களது உதவிகளை வழங்கி வருகின்றனர். அந்த வகையில் நாம் அவர்களுக்கு நன்றி தெரிவிக்க கடமைப்பட்டிருக்கிறோம்." எனத் தெரிவித்தார்.

தள்ளாடி 54 காலாட்படை பிரிவின் ஏற்பாட்டில் நேற்றைய தினம் மன்னார் மாவட்டத்தின் 20 பாடசாலைகளில் குறித்த தூய்மையாக்கல் பணி இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.