வடக்கு கிழக்கில் கண்டு பிடிக்கப்பட்டுள்ள மனித புதைகுழிகள் தொடர்பில் நீதிகோரி மன்னார் அடம்பன் சந்தியில் இருந்து திருக்கேதீஸ்வரம் மாந்தை மனிதப் புதைகுழி வரை இன்று (24.07)வியாழக்கிழமை காலை அமைதிப் பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
மாந்தை மேற்கு வெகுஜன அமைப்புக்களின் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற குறித்த அமைதி பேரணியில் கலந்து கொண்ட மக்கள் பல் வேறு
வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறு ஊர்வலமாகச் சென்றனர்.
குறித்த பதாதைகளில்
“எங்கே எங்கள் உறவுகள் எங்கே?”
“இலங்கை அசரே இது நாடா அல்லது இடு காடா?”
“வேண்டும் வேண்டும் சர்வதேச விசாரணை வேண்டும்”
“மனிதனும் புதை குழிக்குள் நீதியும் புதை குழிக்குள்ளா?”
“சர்வதேசமே மௌனத்தை கலை” உள்ளிட்ட பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்டிருந்தன.
குறித்த பதாதைகளுடன் அடம்பனியில் இருந்து பயணித்து
திருக்கேதீஸ்வரம் மாந்தை மனிதப் புதை குழிக்கு முன் ஒன்று கூடிய மக்கள்,
வடக்கு கிழக்கில் மனிதப் புதைகுழிகளில் எலும்புக்கூடுகளாக மீட்கப்பட்டு வரும் இறந்த உறவுகளுக்குச் சுடரேற்றி, மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
இதன்போது ஏற்பாட்டு குழுவினரால் மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்பணி மார்க்கஸ் அடிகளாரிடம் கோரிக்கை மனுவொன்றும் கையளிக்கப்பட்டது.







