2025 ஆம் அண்டு உலக நோயாளர் பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு முன்னெடுக்கப்பட்ட தேசிய ரீதியில் வைத்தியசாலைகளுக்கிடையில் நோயாளர் பாதுகாப்பை மேம்படுத்தும் செயற்றிட்டங்களுக்கான போட்டியில் மன்னார் பொது வைத்தியசாலை முதலாம் இடத்தைப் பெற்றுக்கொண்டுள்ளது.
சுகாதார அமைச்சினால் உலக நோயாளர் பாதுகாப்பு தினம் கடந்த புதன்கிழமை (17.09) அனுஷ்டிக்கப்பட்ட நிலலையில் தேசிய ரீதியில் வைத்தியசாலைகளுக்கிடையில் நோயாளர் பாதுகாப்பை மேம்படுத்தும் செயற் திட்டங்களுக்கான போட்டிகள் நடாத்தப்பட்டன.
இதன்போது மன்னார் மாவட்டப் பொது வைத்தியசாலை
முதலாம் இடத்தைப் பெற்றுத் தங்க விருது மற்றும் பாராட்டுச் சான்றிதழையும் பெற்றுள்ளது.
குறித்த விருது ,
சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் கலாநிதி நலிந்த ஜயதிஸ்ஸவினால் மன்னார் மாவட்டப் பொது வைத்தியசாலைப் பணிப்பாளர் வைத்திய கலாநிதி அஸாத் எம் ஹனிபாக்கு வழங்கப்பட்டது.
‘ஒவ்வொரு புதிதாகப் பிறந்த குழந்தைக்கும் ஒவ்வொரு சிறு குழந்தைக்கும் பாதுகாப்பான பராமரிப்பு’ எனும் தொனிப்பொருளில் இந்த வருடம் உலக நோயாளர் பாதுகாப்பு தினம் நடைமுறைப்படுத்தப்படுகிறது.
மன்னார் மாவட்ட சுகாதாரத்துறையில் பல்வேறு வளப் பற்றாக்குறைகள் இருந்தபோதும் மன்னார் மாவட்டப் பொது வைத்தியசாலை பணிப்பாளர் ஹனிபாவின் அர்ப்பணிப்பான தலைமைத்துவத்தினால் குறித்த விருது கிடைக்க பெற்றுள்ளது.
இந்தப் போட்டியில் இரண்டாம் இடத்தை வத்துப்பிட்டிவல ஆதார வைத்தியசாலையும் மூன்றாம் இடத்தை உடுகம ஆதார வைத்தியசாலையும் பெற்றுள்ளன.
உலக சுகாதார சபையின் உலக நோயாளர் பாதுகாப்பு தினம் ஆண்டுதோறும் செப்படம்பர் 17 ஆம் திகதி அனுஷ்டிக்கப்படுவதுடன் இதற்கான போட்டிகளும் நடைபெறுகின்றன.
நோயாளர்களின் குடும்பங்கள் சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் சிவில் சமூகம் என்பன உலகலாவில் நோயாளர் பாதுகாப்பை மேம்படுத்த ஒன்றினைக்கப்படும் நிகழ்வாகவும் இது அமைகின்றது.
2025 ஆம் ஆண்டு வாழ்க்கையில் தொடக்கத்திலிருந்தே பாதுகாப்பு முன்னுரிமை அளிக்கப்படுவதை உறுதி செய்வதன் மூலம், புதிதாகப் பிறந்த குழந்தைகள் மற்றும் குழந்தைகளை பாதுகாப்பதில் கவனம் செலுத்தும் கருப்பொருளாக இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுகிறது குறிப்பிடத்தக்கது.







