மன்னாரில் முன்னெடுக்கப்படும் காற்றாலை திட்டத்திற்கு எதிராக இன்றைய தினம் (29.09) மன்னாரில் பொது முடக்க போராட்டம் இடம்பெற்றது.
மாவட்டத்தின் பல பாகங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான மக்கள் வருகை தந்து தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
மன்னார் பிரஜைகள் குழு மற்றும் போராட்டக்குழு இணைந்து பொது முடக்கத்திற்கு அழைப்பு விடுத்திருந்தன.
இதற்கமைய மன்னார் பஜார் பகுதி உள்ளடங்களாக அனைத்து பகுதிகளிலும் உள்ள வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டிருந்தன.
தனியார் போக்குவரத்து சேவைகள் அனைத்தும் நிறுத்தப்பட்டதுடன் பல்வேறு கிராமங்களில் உள்ள மீனவர்கள் கடற்தொழிலுக்கு செல்லவில்லை.
பொது விளையாட்டு மைதானத்தில் இருந்து கண்டன பேரணியும் இன்று முன்னெடுக்கப்பட்டது.
பொது விளையாட்டு மைதானத்தில் ஆரம்பமான குறித்த பேரணி பொது வைத்தியசாலை வீதியூடாக சென்று மன்னார் பொலிஸ் நிலைய வீதியூடாக மன்னார் பஜார் பகுதியை சென்றடைந்தது.
பின்னர் மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன் ஒன்று கூடிய மக்கள் காற்றாலை மற்றும் கனிய மணல் அகழ்வுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.
இதனால் குறித்த பகுதியில் சிறிது நேரம் பதற்ற நிலை ஏற்பட்டது. பின்னர் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் மக்கள் ஒன்று கூடிய இடத்திற்கு வருகை தந்தார்.
இதன் போது போராட்டக்குழு சார்பாக ஜனாதிபதிக்கு அனுப்ப வேண்டிய கடிதம் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபரிடம் கையளிக்கப்பட்டது.
கடிதத்தை பெற்றுக்கொண்ட அரசாங்க அதிபர் உடனடியாக மேலதிக நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மன்னார் நகர சுற்றுவட்ட பகுதியில் தொடர்ச்சியாக போராட்டம் இடம் பெறும் பகுதிக்குச் சென்றனர்.







