எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர் இடையே சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
சஜித் பிரேமதாச இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள நிலையில் இந்த சந்திப்பு புதுடில்லியில் இடம்பெற்றுள்ளது.
இதன்போது சமூக, பொருளாதாரம் மற்றும் அரசியல் உள்ளிட்ட பல முக்கிய விடயங்கள் குறித்து கலந்துரையாடல் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்திய-இலங்கை கூட்டாண்மை, பிராந்திய ஸ்திரத்தன்மை, தொடர்புகள் மற்றும் பரஸ்பர முன்னேற்றம் தொடர்பில் இரு தரப்பினதும்
அர்ப்பணிப்புகள் குறித்தும் கலந்துரையாடல்கள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் நீண்டகால பொருளாதார மறுமலர்ச்சியைத் திட்டமிடுவதற்காக இன்றைய காலத்தைப் பயன்படுத்துவது குறித்து பல கருத்துக்களை ஜெய்சங்கர் இதன்போது முன்வைத்துள்ளார்.
இலங்கைப் பொருளாதாரத்தின் முன்னேற்றங்கள், தொடர்ச்சியாக இடம்பெறும் சீர்திருத்தங்கள் மற்றும் கடன் நிலைத்தன்மையைப் பேணுவதற்கான திட்ட வரைபடம் குறித்து
ஜெய்சங்கருக்கு சஜித் பிரேமதாச விளக்கமளித்தார்.
இதன்பிரகாரம், 2028 முதல் இலங்கை கடனை திருப்பிச் செலுத்த ஆரம்பிக்கும் போது, சர்வதேச நாணய நிதிய வேலைத்திட்டத்திற்குப் பிந்தைய காலகட்டத்தில் எதிர்பார்க்கப்படும் சவால்களையும் எதிர்க்கட்சித் தலைவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.
இதேவேளை, வர்த்தகம், எரிசக்தி மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் ஆகிய துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்தும் இங்கு பல யோசனைகள் இரு தரப்பாலும்
முன்வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும், இலங்கையின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆற்றல் கொள்ளவுத் திறனை விரிவுபடுத்துவது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டதோடு, வலயமைப்பு தொடர்புகளை விரிவுபடுத்துவதன் முக்கியத்துவம் தொடர்பிலும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எடுத்துரைத்தார்.







