சமீபத்தில் ஏற்பட்ட பேரிடரினால் நாட்டு மக்கள் அனைவரும் பாதிப்படைந்துள்ளனர்.
இந்நிலையில் பாதிப்படைந்த மக்களுக்கு உதவுவதற்கு என நாடெங்கிலும் இளைஞர் யுவதிகள் மற்றும் முப்படையினரும் இணைந்து மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அதற்கு அமைவாக இன்றைய தினம்(06.12) மன்னார் மாவட்டத்திற்கு அனுராதபுரத்தில் இருந்து பாராளுமன்ற உறுப்பினர் சுசந்தகுமார நவரத்ன உட்பட நகர சபை,பிரதேச சபை தவிசாளர்கள், தேசிய மக்கள் சக்தி கட்சி உறுப்பினர்கள்,பல்கலைக்கழக மாணவர்கள் பொதுமக்கள் என 400 இற்கும் அதிகமானோர் மன்னாருக்கு வருகை தந்துள்ளனர்.
அத்தோடு மூன்று லொறிகளில் உலர் உணவுப் பொருட்கள் குடிநீர்போத்தல்கள் மற்றும் ஆடைகள் என்பன பாதிப்படைந்த மக்களுக்கு வழங்குவதற்காக எடுத்து வந்துள்ளனர் .
இன்று காலை (06.12) 10 மணி அளவில் மன்னார் முருங்கன் பஜார் பகுயை வந்தடைந்த அவர்கள் அங்கிருந்து குழுக்களாக பிரிக்கப்பட்டு தேவையான பகுதிகளுக்கு சுத்திகரிப்பு பணிகளுக்காக அனுப்பப்பட்டுள்ளனர்.
இன்றும் நாளையும் மன்னாரில் தங்கி இருந்து சுத்திகரிப்பு பணிகளை மேற்கொள்ள உள்ள நிலையில், இன்றைய தினம்(06.12) கற்கிடந்தகுளம், இசைமாலைத் தாழ்வு,ஜீவநகர் போன்ற பகுதிகளில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பொதுமக்களின் வீடுகள் காணிகளைத் துப்புரவு செய்வதுடன் நாளைய தினம் (07.12)மன்னார் மடுக்கரை அச்சங்குளம் ராசமடு போன்ற பிரதேசங்களில் துப்புரவு பணிகளை மேற்கொள்ள உள்ளனர்.
அத்தோடு அவர்கள் எடுத்து வந்த உலர் உணவுப் பொருட்கள் மக்களுக்கு வழங்கப்படுவதற்காக உயிலங்குளம், மாவட்ட வன அலுவலகத்தில் களஞ்சியப்படுத்தி வைக்கப்பட்டுள்ளது.
தேசிய மக்கள் சக்தி கட்சியினரின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்டுள்ள இந்த வேலைத் திட்டத்தில் முசலி நானாட்டான் பிரதேச சபை தவிசாளர்கள்,தேசிய மக்கள் சக்தி கட்சியின் மன்னார் மாவட்ட உறுப்பினர்கள் மற்றும் படையினரும் இணைந்து கொண்டுள்ளனர்.
இந்த வேலை திட்டமானது சிங்கள தமிழ் மக்களிடையே ஐக்கியத்தையும் ஒற்றுமையையும் மேலோங்கச் செய்வதற்கு ஒரு உறவுப் பாலமாக அமையும் என பலராலும் விமர்சிக்கப்படுகின்றது







