ஆண்டிறுதிக்குள் கைதாக உள்ள அரசியல்வாதிகள்

16
0
Spread the love

முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட அரசியல்வாதிகள், அவர்களது உறவினர்கள் மற்றும் அரச உயர் அதிகாரிகள் என சுமார் 50 பேர் இந்த வருட இறுதிக்குள் கைது செய்யப்படக்கூடும் என அரசாங்கத்தின் உயர்மட்ட வட்டாரங்களை மேற்கோள்காட்டி தகவல்கள் வெளியாகியுள்ளன.
இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்து வரும் இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழு, குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மற்றும் பொலிஸ் புலனாய்வுப் பிரிவு ஆகியவை குறித்த நபர்கள் தொடர்பான விசாரணைகளை தீவிரப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இவர்களால் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் ஊழல் மற்றும் முறைகேடுகள் காரணமாக நாட்டுக்கு ஏற்பட்டதாகக் கூறப்படும் நிதி இழப்பு 5,000 கோடி ரூபாவுக்கும் அதிகம் என விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, கடந்த காலங்களில் இடம்பெற்ற பல்வேறு ஊழல் மற்றும் முறைகேடுகள் தொடர்பில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட சுமார் 20 அரசியல்வாதிகள் பல்வேறு தண்டனைகளுக்கு உட்பட்டு தற்போது சிறையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், விசாரணைகளுக்கு உட்படுத்தப்படவுள்ள அரசியல்வாதிகள் மற்றும் உயர் அரச அதிகாரிகள் வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்வதைத் தடுக்கும் வகையில் புலனாய்வுப் பிரிவுகள் ஏற்கனவே நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
குறித்த நபர்களின் நடமாட்டங்களை கண்காணிப்பதற்காக விசேட உளவுத்துறை குழுக்களும் நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதற்கிடையில், பொதுச் சொத்துக்களை வீணடித்ததாகக் கூறப்படும் அரசியல்வாதிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருக்கு எதிரான விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அரசாங்க தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொழில்நுட்ப காரணங்களை சுட்டிக்காட்டி கடந்த காலங்களில் சில வழக்குகளில் இருந்து தப்பியதாகக் கூறப்படும் அரசியல்வாதிகள் தொடர்பான தகவல்களும் தற்போது அதிகாரிகளின் கவனத்திற்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அந்த தொழில்நுட்ப குறைபாடுகளை நிவர்த்தி செய்து, சம்பந்தப்பட்ட வழக்குகளை மீண்டும் பதிவு செய்வதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படுவதாக கூறப்படுகிறது.
எதிர்வரும் முக்கிய தேர்தலுக்கு முன்னர் இந்த விசாரணைகளை நிறைவு செய்து, குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடையவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்க அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாகவும் அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here