இலங்கையர்களை குறிவைத்து சமூக வலைத்தளங்கள் ஊடாக முன்னெடுக்கப்படும் மோசடி நடவடிக்கைகள் தொடர்பில் இலங்கை கணினி அவசரகால பதிலளிப்பு மன்றம் (SLCERT) எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுவரை திரட்டப்பட்ட தகவல்களின் அடிப்படையில், இந்த சட்டவிரோத நடவடிக்கைகள் இந்தியாவிலிருந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரியவந்துள்ளது.
சமூக வலைத்தளங்கள் மற்றும் குறுஞ்செய்தி செயலிகள் ஊடாக இந்த மோசடி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.
மோசடியாளர்கள், தாங்கள் இலக்கு வைக்கும் நபர்களின் தகவல்களை முன்கூட்டியே திரட்டிக் கொண்டு, பெண்களின் புகைப்படங்களைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட இன்ஸ்டாகிராம் கணக்குகள் மூலம் ‘Hi’ என குறுந்தகவல் அனுப்பி தொடர்பை ஏற்படுத்துகின்றனர்.
பின்னர், சில நாட்கள் தொடர்பில் இருந்து நம்பிக்கையை ஏற்படுத்தியதன் பின்னர், அவர்களது அந்தரங்கப் புகைப்படங்கள் அல்லது காணொளி அழைப்புகளைப் பதிவு செய்து கொள்கின்றனர்.
அதனைத் தொடர்ந்து, பணம் வழங்காவிட்டால் குறித்த புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு அனுப்பிவிடுவதாக அச்சுறுத்தி பணம் பறிக்கும் நடவடிக்கையில் ஈடுபடுவதாக SLCERT தெரிவித்துள்ளது.
முகநூல் மெசஞ்சர், இன்ஸ்டாகிராம், டெலிகிராம் மற்றும் வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக ஊடக தளங்கள் மூலம் நிர்வாண புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை வெளியிடுவதாக அச்சுறுத்தி மேற்கொள்ளப்படும் இவ்வாறான மோசடிகள் மீண்டும் அதிகரித்துள்ளதாகவும், இது தொடர்பில் ஏராளமான முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் இலங்கை கணினி அவசரகால பதிலளிப்பு மன்றம் தெரிவித்துள்ளது.
எனவே, அறிமுகமில்லாத சமூக வலைத்தளக் கணக்குகள் அல்லது தொலைபேசி இலக்கங்களிலிருந்து வரும் அழைப்புகள் மற்றும் குறுந்தகவல்களுக்கு பதிலளிக்கும் போது பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.







