யாழ்ப்பாணத்தில் மூன்று நாள் கலாசார மற்றும் உணவுத் திருவிழா

16
0
Spread the love

யாழ்ப்பாணத்தின் பாரம்பரிய உணவு, கலை மற்றும் கலாசார சிறப்புகளை உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு அறிமுகப்படுத்தும் வகையில், ‘யாழ்ப்பாணத்துக்கு வருகை தாருங்கள் 2026 – கலாசார மற்றும் உணவுத் திருவிழா’ எதிர்வரும் ஆகஸ்ட் 15 முதல் 17 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
வட மாகாண சுற்றுலாப் பணியகத்தின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ள இவ்விழா, யாழ்ப்பாணத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க முற்றவெளி பண்ணை மைதானத்தில் மூன்று நாட்களுக்கு இடம்பெறவுள்ளது.
யாழ்ப்பாணத்தின் தனித்துவமான பண்பாட்டு அடையாளங்களையும், வட மாகாணத்தின் வளமான பாரம்பரியத்தையும் சர்வதேச சுற்றுலாத்துறையின் கவனத்திற்கு கொண்டு வருவதுடன், வட மாகாண சுற்றுலாத்துறையை உலகளவில் மேலும் வலுப்படுத்தும் நோக்கத்திலும் இந்த விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த வட மாகாண சுற்றுலாப் பணியகத்தின் தலைவர், வட மாகாணத்தின் தொன்மையான பாரம்பரியம் மற்றும் பண்பாட்டு வளங்களை சுற்றுலாத்துறையின் ஊடாக சர்வதேச மட்டத்தில் மேலும் முன்னிலைப்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.
யாழ்ப்பாணத்தின் நீண்டகால கலாசார மரபுகள், தனித்துவமான பாரம்பரிய உணவுகள் மற்றும் பல்வேறு கலை வடிவங்களை உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு நேரடியாக அறிமுகப்படுத்தும் தளமாக இந்த விழா அமையும் என அவர் குறிப்பிட்டார்.
பண்ணை கடற்கரை மற்றும் யாழ்ப்பாணக் கோட்டைக்கு அருகாமையில் இயற்கை எழில் நிறைந்த சூழலில் அமைந்துள்ள முற்றவெளி பண்ணை மைதானத்தில் நடைபெறும் இந்நிகழ்வு, வட மாகாணத்தின் சுற்றுலாத்துறை வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க ஒரு கட்டமாக அமையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வட மாகாணத்தின் சுற்றுலா வளங்கள், கலாசார பாரம்பரியம், கைவினைப் பொருட்கள், பாரம்பரிய உணவு வகைகள் மற்றும் உள்ளூர் பொருளாதார நடவடிக்கைகளை ஒரே தளத்தில் காட்சிப்படுத்துவதற்கான முக்கிய வாய்ப்பாகவும் இந்த விழா அமையவுள்ளது.
மூன்று நாட்களிலும் பாரம்பரிய உணவுக் கண்காட்சிகள், கைவினைப் பொருட்களின் காட்சிப்படுத்தல் மற்றும் விற்பனை, கலாசார மற்றும் நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சிகள், இசை நிகழ்ச்சிகள், பாரம்பரிய விளையாட்டுகள் மற்றும் உள்ளூர் உற்பத்தியாளர்களின் கண்காட்சிகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.
இந்தப் பெருவிழாவில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள், முதலீட்டாளர்கள், தொழில் முனைவோர் மற்றும் பொதுமக்கள் என அனைவரும் கலந்துகொண்டு பயன்பெறுமாறு வட மாகாண சுற்றுலாப் பணியகம் அழைப்பு விடுத்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here