ரணில் விக்கிரமசிங்கவின் பாதுகாப்பு அதிகாரி – ஊடகவியலாளர் சம்பவம்

63
0
Spread the love

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பாதுகாப்பு அதிகாரிக்கும் ஊடகவியலாளர் ஒருவருக்கும் இடையில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பான விசாரணைகள் பக்கச்சார்பற்ற முறையிலும் துரிதமாகவும் முன்னெடுக்கப்பட வேண்டும் என சுதந்திர ஊடக இயக்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்று முன்தினம் (30) கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்திலிருந்து வெளியேறும் சந்தர்ப்பத்தில், அவரது பாதுகாப்புக் குழுவைச் சேர்ந்த அதிகாரி ஒருவருக்கும் ஊடக நிறுவனமொன்றை பிரதிநிதித்துவப்படுத்திய ஒளிப்பதிவாளருக்கும் இடையில் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த பாதுகாப்பு அதிகாரி தாக்கப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், அவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும், சம்பவம் தொடர்பில் கொம்பனித்தெரு பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் பெறுவதற்காக இன்று (01) குறித்த ஊடகவியலாளர் கொம்பனித்தெரு பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்டிருந்த நிலையில், அங்கு அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உறுதிப்படுத்தியுள்ளதாக சுதந்திர ஊடக இயக்கம் தெரிவித்துள்ளது.

பாதுகாப்பு அதிகாரிகளுக்கு குறிப்பிட்ட இடம் அல்லது நபரின் பாதுகாப்பை உறுதி செய்வது தொடர்பில் கடமைகள் காணப்படுவதுபோல, ஊடக நிறுவனங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் ஊடகவியலாளர்களுக்கும் மக்களின் தகவல் அறியும் உரிமையை உறுதிப்படுத்துவதில் முக்கிய பொறுப்பு காணப்படுவதாகவும் அந்த இயக்கம் தெரிவித்துள்ளது.

இரு தரப்பினரும் தங்களது பொறுப்புகளை புரிந்துகொண்டு, பரஸ்பர புரிந்துணர்வுடனும் ஒருவருக்கொருவர் தொழில்முறை கௌரவத்தைப் பாதுகாக்கும் வகையிலும் செயற்பட வேண்டும் எனவும் சுதந்திர ஊடக இயக்கம் குறிப்பிட்டுள்ளது.

இவ்வாறான சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு ஊடகவியலாளர் ஒருவருக்கு எதிராக குற்றச்சாட்டு முன்வைக்கப்படுவதை சாதாரணமாகக் கருத முடியாது எனவும் அந்த இயக்கம் தெரிவித்துள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் சமூகத்தில் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளமை, குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ள நபரின் தொழில்முறை பின்னணியுடனும் தொடர்புடையது எனக் குறிப்பிட்டுள்ள சுதந்திர ஊடக இயக்கம், சம்பவத்தின் உண்மையான நிலைமையை விரைவாக வெளிப்படுத்த வேண்டியது அவசியம் என வலியுறுத்தியுள்ளது.

அதன்படி, சம்பவம் தொடர்பான விசாரணையை பக்கச்சார்பற்றதும் நடுநிலையானதுமான முறையில் துரிதமாக முன்னெடுத்து, தேவையான அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சுதந்திர ஊடக இயக்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here