கிளிநொச்சி, உருத்திரபுரம் பகுதியில் கடந்த முதலாம் திகதி உயிரிழந்த 17 வயதான சசிதரன் சமரழகி என்ற யுவதியின் மரணத்திற்கு நீதி கோரியும், அவர் தனது கடிதத்தில் பெயர் குறிப்பிட்டதாக தெரிவிக்கப்படும் இளைஞனை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்துமாறும் கோரியும் இன்று (07) கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
உருத்திரபுரம் பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்தக் கவனயீர்ப்பு போராட்டத்தில் பொதுமக்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் கலந்துகொண்டனர்.
யுவதி தனது மரணத்திற்கு அயல் வீட்டைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் காரணம் என கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாகவும், தனது புகைப்படத்தை பயன்படுத்தி தகாத உறவுக்கு அழுத்தம் கொடுத்ததாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் தெரிவித்தனர்.
பழைய மாவட்ட செயலக வளாகத்திற்கு முன்பாக கவனயீர்ப்பில் ஈடுபட்டவர்கள் பின்னர் பேரணியாக கிளிநொச்சி மாவட்ட செயலகம் வரை சென்றனர்.
இதனைத் தொடர்ந்து, யுவதியின் மரணம் தொடர்பில் உரிய விசாரணை முன்னெடுக்கப்பட்டு, உண்மை வெளிக்கொணரப்பட வேண்டும் உள்ளிட்ட தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜரை கிளிநொச்சி மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் நளாயினி இன்பராஜிடம் போராட்டக்காரர்கள் கையளித்தனர்.
இதேவேளை, யுவதி விட்டுச் சென்றதாகக் கூறப்படும் கடிதம் மற்றும் அவரது தொலைபேசி உள்ளிட்ட சாத்தியமான ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டு சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணை நடத்தப்பட வேண்டும் என உருத்திரபுரத்தைச் சேர்ந்த பொது அமைப்புகள் ஏற்கனவே கோரிக்கை விடுத்துள்ளன.







