நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக, பல மாவட்டங்களில் மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கையை தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் நீடித்துள்ளது.
இன்று (12) மாலை 4 மணி முதல் நாளை (13) மாலை 4 மணி வரை 24 மணித்தியாலங்களுக்கு இந்த எச்சரிக்கை அமுலில் இருக்கும் என அனர்த்த முகாமைத்துவ நிலையம் வெளியிட்டுள்ள உத்தியோகபூர்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, கேகாலை மாவட்டத்தின் மாவனெல்ல, ருவன்வெல்ல மற்றும் புலத்கொஹுபிட்டிய ஆகிய பகுதிகளுக்கு இரண்டாம் நிலை மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், பதுளை மாவட்டத்தின் எல்ல, பசறை, கொழும்பு மாவட்டத்தின் பாதுக்க,கண்டி மாவட்டத்தின் தும்பனை, ஹதரலியத்த.கேகாலை மாவட்டத்தின் தெஹியோவிட்ட, அரநாயக்க, யட்டியாந்தோட்டை, ரம்புக்கனை, வரக்காப்பொல, கேகாலை, மாத்தளை மாவட்டத்தின் அம்பன்கங்கை கோரளை, ரத்தோட்டை, மாத்தளை; நுவரெலியா மாவட்டத்தின் ஹங்குரன்கெத்த மற்றும் இரத்தினபுரி மாவட்டத்தின் எஹெலியகொட, அயகம, வெலிகேபொல, களவானை, இம்புல்பே, நிவித்திகலை, குருவிட்ட, இரத்தினபுரி ஆகிய பகுதிகளுக்கு முதலாம் நிலை மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மண்சரிவு அபாயம் முன்னர் அடையாளம் காணப்பட்ட பகுதிகள், செங்குத்தான மலைச்சரிவுகள் மற்றும் ஆபத்தான சரிவுகளுக்கு அருகில் வசிப்பவர்கள் விசேட அவதானத்துடன் இருக்குமாறும், நிலைமை மோசமடைந்தால் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லத் தயாராக இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.







