கலகொடஅத்தே ஞானசார தேரரை விடுதலை செய்யுமாறு கோரி கொழும்பில் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டத்தின் பின்னணியில், உலபனே சுமங்கல தேரர் உள்ளிட்ட 54 பேருக்கு எதிராக நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
கொழும்பு கோட்டை நீதவான் பசன் அமரசேனவினால் இன்று (16) இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஞானசார தேரரை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி பௌத்த பிக்குகள் தலைமையில் முன்னெடுக்கப்பட்ட பாதயாத்திரை, நேற்று (15) கொழும்பிலுள்ள ஜனாதிபதி செயலகத்தை வந்தடைந்தது.
இதனைத் தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்ட பிக்குகள் மற்றும் ஆதரவாளர்கள் ஜனாதிபதி செயலகத்திற்கு அருகில் தொடர்ந்து தங்கியிருந்தனர்.
போராட்டக்காரர்கள் ஜனாதிபதி செயலக வளாகத்தில் தங்கியிருப்பதைத் தடுக்கும் வகையில் பொலிஸார் முன்வைத்த கோரிக்கையைப் பரிசீலித்த நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
போராட்டக்காரர்கள் பின்னர் ஜனாதிபதி செயலகத்திற்கு எதிர்ப்புறத்தில் உள்ள நடைபாதையில் தங்கியிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஞானசார தேரரை விடுதலை செய்வது தொடர்பில் அரசாங்கம் தெளிவான பதிலை வழங்க வேண்டும் எனப் போராட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த நிலையில், நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை போராட்டத்தின் அடுத்தகட்ட நகர்வுகள் தொடர்பில் கவனம் பெற்றுள்ளது.







