கடந்த காலங்களில் காணாமல் போன தமது உறவினர்கள் தொடர்பான தகவல்களைத் தேடி வரும் 119 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள், கல்முனையில் அமைந்துள்ள காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் விசாரணை நடவடிக்கைகளுக்காக அழைக்கப்பட்டுள்ளனர்.
இன்று (16) காலை நடைபெற்ற இந்தச் சந்திப்பில், பல ஆண்டுகளாகத் தமது உறவினர்களின் நிலை என்னவென்று தெரியாமல் தவித்து வரும் குடும்பங்களின் அனுபவங்களும், இதுவரை முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் முன்னேற்றம் குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது.
1990ஆம் ஆண்டு வீட்டிலிருந்து அழைத்துச் செல்லப்பட்ட தனது கணவர் இதுவரை வீடு திரும்பவில்லை என்றும், கடந்த 36 ஆண்டுகளாக அவரைத் தேடி வருவதாகவும் பாதிக்கப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது வேதனையைப் பகிர்ந்துள்ளார்.
25,000 பேரின் விவரங்கள் பதிவு
காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் ஆணையாளர் சட்டத்தரணி வடிவேல் கிருஷ்ணமூர்த்தி தெரிவிக்கையில், அலுவலகத்தில் சுமார் 25,000 பேரை உள்ளடக்கிய பட்டியல் இருந்ததாகவும், இரட்டைப் பதிவுகள் உள்ளிட்ட விடயங்களைச் சரிபார்த்த பின்னர் தற்போது 17,000 பேரின் தரவுகள் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அவர்களில் சுமார் 11,000 பேருக்கான ஆரம்பக்கட்ட விசாரணைகள் இதுவரை முன்னெடுக்கப்பட்டுள்ளன.
ஆரம்பக்கட்ட விசாரணைகளுக்குப் பின்னர், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இடைக்கால நிவாரணமாக 2 இலட்சம் ரூபாய் வழங்கப்படுவதுடன், காணாமல் போனவர்களுக்கு என்ன நேர்ந்தது என்பதைக் கண்டறிவதற்கான மேலதிக விசாரணைகளும் தொடர்ந்து முன்னெடுக்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
மூல ஆவணங்களை வழங்க வேண்டாம் என எச்சரிக்கை
காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாகக் கூறிக்கொண்டு சில நிறுவனங்களும் தனிநபர்களும் பாதிக்கப்பட்ட குடும்பங்களிடமிருந்து மூல ஆவணங்களைச் சேகரிப்பதாகத் தகவல்கள் கிடைத்துள்ளதாக அலுவலகம் எச்சரித்துள்ளது.
பிறப்புச் சான்றிதழ்கள் மற்றும் காணாமல் போனவர்களின் புகைப்படங்கள் உள்ளிட்ட ஆவணங்களின் சான்றளிக்கப்பட்ட பிரதிகள் அல்லது நகல்களை மட்டுமே அலுவலகம் சேகரிப்பதாகவும், முக்கியமான மூல ஆவணங்களை எவரிடமும் ஒப்படைக்க வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கல்முனை பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் வியாழக்கிழமை ஆரம்பமான இந்த நடவடிக்கைகள் வெள்ளிக்கிழமையும் தொடர்ந்துள்ளன. பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த காணாமல் போனவர்களின் குடும்ப உறுப்பினர்கள் இதில் பங்கேற்றுள்ளனர்.
பல தசாப்தங்களாகத் தமது உறவினர்களின் நிலை குறித்து பதிலுக்காகக் காத்திருக்கும் குடும்பங்களுக்கு உண்மையை வெளிக்கொணர்வதற்கான விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.







