துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுக்கு உள்ளாகி உயிரிழந்த கவனிப்புக்குரிய ‘காவன்திஸ்ஸ’ யானையின் மரணம் தொடர்பில் விரிவான விசாரணைகளை முன்னெடுப்பதற்காக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவினால் விசேட நிபுணர் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. இக்குழுவின் முதலாவது கூட்டம் இன்று காலை உத்தியோகபூர்வமாகக் கூடவுள்ளது.

சுற்றாடல் மற்றும் வனஜீவராசிகள் அமைச்சின் முன்னாள் செயலாளர் ஏ.எச். சரத் விஜேசிங்க தலைமையில் இந்தக் குழு செயற்படவுள்ளது. இக்குழுவில் பேராசிரியர் டி. சமிந்த பெர்னாண்டோ, பேராசிரியர் ஏ.ஜி. அனில் புஷ்பகுமார, பேராசிரியர் யு.கே. கலிங்க பத்மலால், மருத்துவர் ஜகத் குணவர்தன மற்றும் சட்டத்தரணி சரக ஜயரத்ன ஆகியோர் உறுப்பினர்களாகச் செயற்படவுள்ளனர்.
இறந்த யானையின் மரணத்துக்கான உண்மையான காரணங்களை ஆழமாக விசாரிப்பதோடு, தேசிய அளவில் யானைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான அவசியமான பரிந்துரைகளையும் எதிர்காலத் திட்டங்களையும் இந்தக் குழு முன்வைக்கவுள்ளது. விசாரணை குறித்த முழுமையான அறிக்கையை அடுத்த ஒரு மாத காலத்திற்குள் ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்க நிபுணர் குழு திட்டமிட்டுள்ளது.







