மன்னார் நகர சபை பிரிவில் அகழ்வு செய்யப்படுகின்ற கழிவுகளை கொட்டுவதற்கு நிரந்தர இடம் ஒதுக்கி தரும் வரை மாவட்ட செயலகத்திற்கு முன் கழிவுகளுடன் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனம் அகற்றப்படாது என நகரசபை முதல்வர் டானியல் வசந்தன் தெரிவித்துள்ளார்.
மன்னார் நகர சபையில் இன்று செவ்வாய்க்கிழமை (14.10) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“மன்னார் நகர சபை பிரிவில் அகழப்படுகின்ற கழிவுகளை அகற்றி சேகரிப்பதற்கான ஒரு இடம் இது வரை எமக்கு கிடைக்கவில்லை.
இறுதியாக இடம் பெற்ற மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் இரண்டு வாரத்தில் இடம் ஒதுக்கி வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.
ஆனால் இரு மாதங்களாகியும் இடம் ஒதுக்கப்படவில்லை அத்துடன் பிரச்சினைக்கு எவ்வித தீர்வும் கிடைக்கவில்லை.
சின்னக்கடை வட்டாரத்தில் ஒரு இடத்திலேயே, அகழப்படுகின்ற குப்பைகளை கொட்டி வந்தோம். இதன்காரணமாக அந்த இடத்தில் பாரிய தொற்று நோய் பரவும் நிலை ஏற்பட்டுள்ளது.
அந்த பகுதியில் வசிக்கும் மக்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க வேண்டிய நிலை தற்போது ஏற்பட்டுள்ளது.
மக்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் அந்த இடத்தில் குப்பை கொட்டுவது உடனடியாக நிறுத்தப்பட்டுள்ளது.
மன்னார் நகர சபை பிரிவில் அகழ்வு செய்யப்படுகின்ற குப்பைகளை கொட்டுவதற்கு ஒரு இடம் ஒதுக்கி தருமாறு , மாவட்ட செயலாளர் , வன ஜீவராசிகள் திணைக்களம் வன பாதுகாப்பு திணைக்களம் ஆகிய திணைக்களங்களிடம் கோரிக்கை விடுத்திருந்தேன்.
மக்களின் தேவைகளுக்காக இடம் ஒதுக்கி தர முடியாத நிலையில் பறவைகளுக்கும், மிருகங்களுக்கும் இடத்தை ஒதுக்குகிறார்கள்.
ஆனால் மன்னார் மக்களின் தேவைக்காக இடம் ஒதுக்க மறுக்கின்றார்கள்.
குப்பை அகழ்வு செய்தாலும், கொட்டுவதற்கு இடம் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் நேற்றைய தினம் திங்கட்கிழமை(13.10) அகழ்வு செய்யப்பட்ட குப்பைகள் வாகனத்துடன்
மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (14.10) குப்பை அகழ்வு செய்யப்படவில்லை.
கழிவுகளை கொட்ட நிரந்தர இடம் ஒதுக்கும் வரை மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன்னால் கழிவுகளுடன் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களை எந்த காரணம் கொண்டும் அந்த இடத்திலிருந்து எடுக்க மாட்டோம்” என அவர் மேலும் தெரிவித்தார்.







