மன்னார் தீவகப் பகுதியில் இரவு நேரங்களில் தொடர்ச்சியாக ஏற்பட்டுவரும் மின்தடை தொடர்பாக மாவட்டத்தின் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் கூட்டு தொலைபேசி அழைப்பு (Conference Call) மூலம் இன்று(05) கலந்துரையாடியதாக பாராளுமன்ற உறுப்பினர் ம. ஜெகதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், மன்னார் மாவட்ட அரச அதிபர், மன்னார் மின்சார சபையின் நிறைவேற்று பொறியியலாளர் மற்றும் வீதி அபிவிருத்தி அதிகார சபை அதிகாரிகள் ஆகியோருடன் ஒரே நேரத்தில் கூட்டு தொலைபேசி அழைப்பின் ஊடாக பிரச்சினை குறித்து விரிவாக ஆராய்ந்ததாகக் குறிப்பிட்டார்.
இதன்போது, தற்போது காற்று அதிகம் வீசும் காலமாக இருப்பதால் காற்றுடன் சேர்ந்து வரும் ஈரப்பதன் கொண்ட தூசித் துகள்கள் மின்கம்பிகளில் படிவதே அடிக்கடி மின்தடை ஏற்படுவதற்கான முக்கிய காரணம் என மின்சார சபையின் நிறைவேற்று பொறியியலாளர் விளக்கமளித்ததாக அவர் தெரிவித்தார். இந்தப் பிரச்சினையை அடுத்த இரண்டு வாரங்களுக்குள் சீர்செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பொறியியலாளர் உறுதியளித்ததாக கூறினார்.
மேலும், மன்னார்–வவுனியா மின்சார விநியோகப் பாதையின் உயிலங்குளம் பகுதியில் இருந்து மாற்று மின்சார இணைப்புப் பாதை அமைக்கப்பட்டால் இப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண முடியும் எனவும் பொறியியலாளர் தெரிவித்ததாக அவர் கூறினார்.
அந்தப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டிருந்த போதிலும், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் அனுமதி அவசியம் என தெரிவிக்கப்பட்டதால் அவை இடைநிறுத்தப்பட்டிருந்ததாகவும், இதன்போது கொன்பரன்ஸ் அழைப்பிலேயே வீதி அபிவிருத்தி அதிகார சபை அதிகாரிகளிடம் தேவையான அனுமதியை வழங்குமாறு தாம் கோரிக்கை விடுத்ததாகவும் தெரிவித்தார்.
அதற்கு அவர்கள் இணக்கம் தெரிவித்துள்ளதாகவும், இதன் அடிப்படையில் அடுத்த இரண்டு வாரங்களுக்குள் பணிகள் நிறைவடைந்து மன்னார் மக்களுக்கு நிலையான தீர்வு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் ம. ஜெகதீஸ்வரன் தெரிவித்துள்ளார்






