அனைத்து அரச ஊழியர்களுக்கும் அரசாங்கத்தின் மூலம் உத்தியோகபூர்வ மின்னஞ்சல் (Email) முகவரிகளை வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் ஒட்டுமொத்த அரச சேவையையும் ஒரே வலையமைப்பில் இணைக்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், காணொளி மாநாடுகள் உள்ளிட்ட பணிகளுக்காக அரச அதிகாரிகளை இலகுவாகத் தொடர்புகொள்வதற்கும், அரச நிறுவனங்களுக்கு இடையிலான தரவுப் பரிமாற்றத்தை மேலும் திறம்பட மேற்கொள்வதற்கும் இந்தத் திட்டம் உதவும் என அவர் தெரிவித்துள்ளார்.
தற்போது பெரும்பாலான அரச ஊழியர்கள் தமது பணிகளுக்காக தனிப்பட்ட முறையில் உருவாக்கிய மின்னஞ்சல் முகவரிகளைப் பயன்படுத்தி வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதற்குப் பதிலாக அரசாங்கத்தால் வழங்கப்படும் உத்தியோகபூர்வ மின்னஞ்சல் முகவரிகளைப் பயன்படுத்துவதன் மூலம் அலுவல் ஆவணங்கள் மற்றும் முக்கியமான தரவுகளைப் பாதுகாப்பாகவும் இலகுவாகவும் பரிமாறிக்கொள்ள முடியும் எனவும் பிரதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தின் டிஜிட்டல் மயமாக்கல் திட்டத்தை விரைவுபடுத்துவதற்கும், அதனை மேலும் பயனுள்ள வகையில் நடைமுறைப்படுத்துவதற்கும் இந்தத் திட்டம் உதவும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.







